யாசிர் அரபாத்தின் உடல் சோதனைக்காகத் தோண்டி எடுக்கப்பட்டது
- 10 சூலை 2014: காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு
- 3 சூலை 2014: கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு
- 24 ஏப்பிரல் 2014: பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது
- 28 சூலை 2013: பாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு
- 7 சனவரி 2013: மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு
செவ்வாய், நவம்பர் 27, 2012
பாலத்தீனத்தின் முன்னாள் தலைவர் யாசிர் அரபாத் எவ்வாறு இறந்தார் என்பதைக் கண்டறிவதற்காக அவரது உடல் சோதனைக்காக இன்று தோண்டி எடுக்கப்பட்டது.
2004ம் ஆண்டு பிரான்சின் இராணுவ மருத்துவமனை ஒன்றில் தனது 75வது வயதில் உயிரிழந்த யாசிர் அரபாத்தின் உடைமைகளில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வல்லுனர் குழுவொன்று அண்மையில் பொலொனியம் -210 என்ற கதிரியக்கம் இருப்பது கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து மேலதிக விசாரணைக்கு பிரான்சு உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை ஏதும் மேற்கொள்ளப்படாது அப்படியே அவரது உடல் புதைக்கப்பட்டது. எனினும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியார் சுகா அரபாத் சர்ச்சை எழுப்பியிருந்தார். இசுரேலே அரபாத்தை நஞ்சூட்டிக் கொன்றிருக்கலாம் என பெரும்பாலான பாலத்தீனர்கள் நம்புகின்றனர். ஆனால் இசுரேல் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வந்திருக்கிறது.
இவரது உடல் பகுதிகள் சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு, மற்றும் உருசிய வல்லுனர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இவர்கள் இவற்றைத் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்று பரிசோதிப்பார்கள்.
அரபாத்தின் உடல் மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் உள்ள நினைவாலயம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. உடல் தோண்டியெடுக்கப்படவிருப்பதை முன்னிட்டு இந்த நினைவாலயம் பார்வையாளர்களுக்கு கடந்த மாதம் மூடப்பட்டது. இவரது உடல் இன்று தோண்டியெடுக்கப்பட்டௌ அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாலத்தீனிய மருத்துவர்களால் உடல் பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு மீண்டும் நினைவாலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் பரிசோதனைகளின் முடிவுகள் தெரிய பல மாதங்கள் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
35 ஆண்டு காலம் பாலத்தீன விடுதலை இயக்கத்தைக் கொண்டு நடத்திய யாசிர் அரபாத் 1996 ஆம் ஆண்டில் பாலத்தீன அதிகாரசபையின் முதலாவது தலைவரானார்.
மூலம்
[தொகு]- Yasser Arafat's remains exhumed in murder inquiry, பிபிசி, நவம்பர் 27, 2012
- Yasser Arafat's body exhumed, சிஎன்என், நவம்பர் 27, 2012