உள்ளடக்கத்துக்குச் செல்

யுரேனிய செறிவூட்டல் திட்டத்தை நிறுத்துவதற்கு வட கொரியா இணக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 2, 2012

வட கொரியா தனது யுரேனிய செறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்துடன் சேர்த்து அணுசக்தி மற்றும் நீண்ட-தூர ஏவுகணைகளுக்கான சோதனைத் திட்டத்தையும் நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதை அமெரிக்கா, மற்றும் உலக நாடுகள் வரவேற்றுள்ளன.


கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிரதேசமாக்குவதற்கு இது ஒரு முக்கிய படிக்கல்லாக இருக்கும் என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜெய் கார்னி தெரிவித்திருக்கிறார். சீனாவும் உருசியாவும் இதனை வரவேற்றுள்ளன. இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கை என சப்பான் கூறியுள்ளது.


கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் வட கொரிய அதிகாரிகளுக்கும் இடையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் தனது யுரேனிய செறிவூட்டல் திட்டத்தைக் கைவிடும் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்கு ஐநா சோதனையாளர்களை அனுமதிக்கவும் வடகொரியா இணங்கியிருக்கிறது.


வடகொரியாவுக்கு 240,000 தொன் உணவு உதவியை வழங்குவதற்கு அமெரிக்க உறுதியளித்துள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் மேலும் தொடரும் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.


வடகொரியாவில் 1990களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதன் பிற்பாடு அங்கு பெரும் உணவுப் பற்றாக்குறை நிலவி வருகிறது. 2009 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா வடகொரியாவிற்கு உணவு அனுப்புவதை நிறுத்தியுள்ளது. புதிய திட்டத்தின் படி அமெரிக்கா சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையே அனுப்பவுள்ளது.


வடகொரியாவின் புதிய தலைவர் 28 வயதான கிம் யொங் உன்னின் தந்தை இறந்த இரண்டு மாதங்களுக்குள் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]