உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா குற்றவாளியாகக் காணப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 16, 2012

அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை ‘உட்தகவல் வணிகம்’ மூலம் அறிந்து பெரும் பண மோசடியில் ஈடுபட்டு குற்றவாளியாகக் காணப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ராஜ் ராஜரத்தினத்திற்கு உட்தகவல் கொடுத்து உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதான அமெரிக்க வாழ் இந்தியரும் கோல்ட்மென் சேக்ஸ், மற்றும் புரொக்டர் அண்ட் காம்பில் நிறுவனங்களின் முன்னாள் இயக்குனருமான ரஜத் குப்தா குற்றவாளி என நியூயோர்க் நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.


ரஜத் குப்தா

கல்கத்தாவில் பிறந்த 63 அகவையுடைய ரஜத் குப்தா பங்குச் சந்தை மோசடியில் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும், மற்றும் சதி முயற்சியில் ஈடுபட்டதற்காகவும் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் நடுவண் சான்றாயர் குழுவினால் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனையடுத்து பங்குச் சந்தை மோசடிகளுக்காக அதிக பட்சம் 20 ஆண்டுகளும், சதி முயற்சிக்காக அதிகபட்சம் 5 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 18 ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்படும் வரை ரஜத் குப்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெட் ராக்கொவ் தெரிவித்தார்.


ரஜத் குப்தா தான் பணியாற்றிய நிறுவனங்களின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்கு அளித்ததாகவும், இதை அடிப்படையாக வைத்து ராஜரத்தினம் இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை சரியாக இருக்கும்போது பங்குகளை வாங்கிக் குவித்ததாகவும், நிலைமை சரிய ஆரம்பித்த போது பங்குகளை விற்று பல பில்லியன் லாபம் அடைந்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக ரஜத் குப்தா உள்ளிட்டோருக்கு ராஜரத்தினம் ஏராளமான பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.


குப்தா குற்றமற்றவர் என அவரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறினார். தேவைப்பட்டால் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]