உள்ளடக்கத்துக்குச் செல்

லண்டன் வன்முறைகள் இங்கிலாந்து முழுவதும் பரவியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 10, 2011

லண்டனில் தொடரும் கலவரம் மூன்றாவது இரவாக நேற்றைய நாளும் நீடித்துள்ளது. அத்துடன் இந்த கலவரம் மேலும் பல இடங்களுக்கு பரவி உள்ளதாக லண்டன் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். லண்டனின் பல இடங்களில் கலவரங்களும் வன்முறையும் சூறையாடல்களும் நடந்துள்ளன.


லண்டனில் 1930 ஆம் ஆண்டுக் கட்டடம் ஒன்று தீக்கிரையானது.

பர்மிங்ஹாம், லிவர்ப்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹம், பிரிஸ்டல் ஆகிய ஊர்களிலும் வீதிக் கலவரங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் லண்டனில் மேலதிகமாக 1,700 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்துடன் தொடர்புடைய 334 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், 69 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லான்ட் யார்ட் காவல்துறை அறிவித்துள்ளனர். பர்மிங்ஹாமில் வின்சன் கிறீன் என்ற இடத்தில் வீதிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தமது குடும்பத்தினரையும் சுற்றுப் புறத்தையும் காப்பதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாக்கித்தானிய இளைஞர்கள் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாகனம் ஒன்றை ஏற்றிக் கொன்றனர்.


இதனிடையே, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் தனது இத்தாலி விடுமுறை சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, நேற்று நாடு திரும்பினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இது குறித்து டேவிட் கேமரன் கூறுகையில், "கலவரத்தில் ஈடுபட்டதாக, இதுவரையிலும், 460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியத் தெருக்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சட்டத்தின் கடுமையை கலவரக்காரர்கள் உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டியுள்ளது' என்றார்.


பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் வசிக்கும் லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள டொட்டன்ஹாம் பகுதியில் முதலில் இந்த வன்முறை பரவியது. 16 வயது சிறுமியை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதாலும், மார்க் டுக்கான் (29) என்ற வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டதாலும் இந்த வன்முறை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுமார் 300 பேர் காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் மேலும் பரவியது.


மூலம்

[தொகு]