லிபியாவில் மக்கள் எழுச்சி தொடர்கிறது, கிழக்கு நகரங்களின் கட்டுப்பாட்டை கடாபி இழந்தார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 24, 2011

கடந்த ஒரு வாரகாலமாக லிபியாவில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை அடுத்து நாட்டின் பல நகரங்களின் கட்டுப்பாட்டை நீண்டநாள் ஆட்சியாளரான முவம்மர் கடாபி இழந்து வருகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் திரிப்பொலி மற்றும் மேற்கு லிபிய நரங்கள் பலவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் பெரும் முயற்சிகளை கடாபி மேற்கொண்டு வருகிறார்.


முவம்மர் அல்-கடாபி

மோதல்களில் குறைந்தது 300 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றதொன்றாகக் காணப்படுகின்றது.


தலைநகரின் வீதிகளை கடாபியின் ஆதரவுப் படைகள் நுழைந்து தாக்கி வருவதால் நகரம் முழுவதும் வெறிச்சோடிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு நகரங்களில் மக்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் லிபியாவை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.


லிபியாவின் மேற்குப்பகுதி நகரான மிசுராட்டா நகரில் தாம் நிலை கொண்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அந்நகரில் உள்ள இராணுவத்தினர் போராட்டத்துக்கு ஆதரவளித்து வருவதாக இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


நாட்டின் கிழக்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதாக எகிப்திய எல்லைக்கு 140 கிமீ தூரத்தில் உள்ள டொல்புரூக் நகரில் இருந்து அல்-ஜசீரா செய்தியாளர் தெரிவிக்கிறார். அங்கு இராணுவத்தினர் எவரும் இல்லை எனக் கூறப்படுகிறது.


"நான் பார்த்த மட்டில், கிழக்கு லிபியா மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது," என செய்தியாளர் ஓடா அப்தெல்-ஹமீட் கூறுகிறார். லிபிய எல்லையில் எல்லப்பாதுகாப்புப் பணியில் எவரும் நிறுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.


இதற்கிடையில், அல்-கடாபி இரு வார இடைவெளியின் பின்னர் செவ்வாயன்று தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். வீதிகளில் அரசுக்கெதிராகப் போராடுவோரை சுட்டுக்கொல்லுங்கள், கைது செய்யுங்கள் சரணடையும் வரை ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கியொடுக்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டு உரையாற்றினார். இது எனது நாடு இதைக் காப்பாற்ற எனது இறுதி இரத்தம் இம்மண்ணில் விழும் வரை போராடுவேன். எந்த வெளிநாட்டுச் சக்திகளுக்கும் அடிபணியமாட்டேன் என்று அவர் கூறினார். வீடுகளிலுள்ளோரை எலி பிடிப்பதைப் போல் பிடியுங்கள். நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக வெளியான தகவல்களை நிராகரித்துள்ள லிபியத் தலைவர் வெளிநாட்டுச் செய்திச் சேவைகளை "நாய்'களென விமர்சித்துள்ளார்.


இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதான தாக்குதல்களைக் கண்டித்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் லிபிய உயர் மட்ட அதிகாரிகள் தமது பதவிகளை துறந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு போர் விமானங்களை மோல்ட்டாவில் தரையிறக்கியுள்ள லிபிய விமானிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குண்டுகளை வீசுமாறு தமக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறி மோல்ட்டாவில் தஞ்சம் கோரியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]