லிபியாவுக்கான தனது தூதரை நைஜீரியா திரும்ப அழைத்தது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, மார்ச் 19, 2010

நைஜீரியா மத ரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என லிபியாத் தலைவர் முவாம்மர் கடாபி தெரிவித்திருந்ததை அடுத்து லிபியாவுக்கான தனது தூதரை நைஜீரியா திருப்பி அழைத்துள்ளது.


முவாம்மர் கடாபி

லிபியத் தலைவரின் அறிக்கை ”ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை” என நைஜீரிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


மத்திய நைஜீரியாவில் முஸ்லிம், மற்றும் கிறித்தவக் கிளர்ச்சிக்குழுக்களிடையே மேலும் இரத்தக்களரிகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு இந்தப் பிரிவினை இன்றியமையாதது என கேர்ணல் கடாபி தெரிவித்திருந்தார்.


இவ்வாண்டு ஜொஸ் என்ற நகரில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் வன்முறைகளில் இறந்துள்ளனர்.


நைஜீரியா பொதுவாக வடக்கே பெரும்பான்மையாக முஸ்லிம்களையும், தெற்கே பெரும்பான்மையாக கிறித்தவர்களையும் கொண்டுள்ளது.


ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக அண்மைக்காலம் வரை இருந்த கேர்ணல் கடாபி, 1947 ஆம் ஆண்டில் இந்தியா இரண்டாகப் பிரிந்தது போன்ற ஒரு தீர்வு நைஜீரியாவுக்கும் உகந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.


1947 ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினையை அடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்ததை அடுத்து அங்கு 200,00 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 12 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர்.


1967 ஆம் ஆண்டில் தென்கிழக்கு நைஜீரியாவில் இக்போ மக்கள் பிரிந்து போக முடிவெடுத்ததை அடுத்து அங்கு இடம்பெற்ற போரில் ஒரு மில்லியன் பேர் இறந்தனர்.

மூலம்