லிபியா மீது மேற்குலக நாடுகள் வான் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 20, 2011

லிபியா மீது ஐநா கொண்டு வந்த வான்பறப்புத் தடையை அமுல் படுத்தும் முகமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் லிபியத் தலைவர் முவாம்மர் கடாபியின் படைத்தளங்களை நோக்கி நேற்று சனிக்கிழமை மாலை முதல் வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளன.


மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க, மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவ நிலைகளில் இருந்து 110 இற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியுள்ளதாக பெண்டகன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைநகர் திரிப்பொலி, மற்றும் மிஸ்ராட்டா நகரங்களின் மீது சீர்வேக ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டதாகவும், 150 பேர் காயமடைந்ததாகவும் லிபியத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


தம் நாட்டைத் தாக்குவோர் மீது எதிர்த்தாக்குதல் நடத்தப்படும் என கேர்னல் கடாபி தெரிவித்துள்ளார். லிபியாவைக் காப்பதற்காக ஆயுதக்கிடங்குகளை பொது மக்களுக்குத் திறந்து விடப் போவதாக அவர் கூறியுள்ளார்.


நேற்று சனிக்கிழமை கிரீனிச் நேரப்படி மாலை 1645 மணிக்கு முதலாவது ஏவுகணையை பிரெஞ்சு விமானம் ஒன்று லிபிய அரசுத் தளங்கள் மீது ஏவியது. இத்தாக்குதலில் பல இராணுவ வாகனங்கள் சேதமுற்றதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.


நேற்றைய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய அமெரிக்கா "பரந்த கூட்டுத் திட்டம்" ஒன்றின் அடிப்படையிலேயே தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும், இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் எனவும் கூறினார். அமெரிக்கத் தரைப்படை இத்தாக்குதலில் பங்குபற்றாது என உறுதி கூறினார்.


முன்னதாக சனிக்கிழமை அன்று கடாபி அறிவித்த போர் நிறுத்தத்தை மீறி கடாபிக்கு ஆதரவான படையினர் எதிர்ப்பாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகர் மீது தாக்குதல் தொடுத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்துக்கு அருகில் கடும் சண்டை மூண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


நேற்றைய தாக்குதல் ஆரம்பித்த சில நிமிட நேரத்தில் பிரெஞ்சு விமானம் ஒன்றைத் தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக லிபியத் தொலைக்காட்சி அறிவித்திருந்தது. ஆனாலும், இதனை பிரான்ஸ் மறுத்துள்ளது. தமது விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாகத் தமது நிலைக்குத் திரும்பியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.


கடந்த 42 ஆண்டுகளாக கடாபி லிபியாவை ஆண்டு வருகிறார். இவருக்கெதிரான கிளர்ச்சி கடந்த மாதத்தில் ஆரம்பித்திருந்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]