லோக்பால் மசோதாவில் அசாரே முன்வைத்த கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, ஆகத்து 28, 2011

அண்ணா அசாரே முன்வைத்த 3 அம்சக் கோரிக்கைகளை லோக்பால் மசோதாவில் சேர்ப்பது தொடர்பான தீர்மானம் நேற்று சனிக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து அசாரே இன்று காலை 10:20 மணிக்கு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். இவருக்கு 3 சிறு குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி உண்ணாவிரதத்தை முடித்தார்.


லோக்பால் என்று சொல்லப்படுகின்ற ஊழல் ஒழிப்பு நடைமுறைக்கான சட்ட மசோதா வலுப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது. இதையடுத்து அவரது போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நடந்த விவாதத்தில் காங்கிரஸ், பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே அசாரேயின் 3 அம்சங்களுக்கு ஆதரவு தெரிவித்தன. லோக்பால் மசோதா தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்படும். அதேநேரம் நாடாளுமன்றத்தில் விவாதம் மட்டும் நடத்தினால் போதாது, அதை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது ஓட்டெடுப்பும் நடத்த வேண்டும் என்றும் புதிய நிபந்தனையை நேற்றுக்காலை அசாரே விதித்திருந்தார். இதையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வருவதில் சிக்கல் எழுந்தது. இதற்கிடையே ஹசாரேயின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவரது இதய துடிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்திருந்தனர்.


முதலில் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், பின்னர் மக்களவையிலும் இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்குப் பிறகு மக்களவையை நாள் முழுவதும் சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். திட்டமிட்டபடி குரல் வாக்கெடுப்பு நடக்காததால், இந்தத் தீர்மானம் நிறைவேறியதா என்பது குறித்து குழப்பம் எழுந்தது. ஆனால், குரல் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அனைத்து எம்.பி.க்களும் மேசையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

Bookmark-new.svg