வங்கதேச இசுலாமியத் தலைவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பை அடுத்துக் கலவரம், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 1, 2013

1971 ஆம் ஆண்டில் பாக்கித்தானுடனான விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வங்காளதேசத்தின் மூத்த இசுலாமியத் தலைவர் ஒருவருக்கு அந்நாட்டின் போர்க்குற்ற சிறப்பு நீதிமன்றம் நேற்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததை அடுத்து நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.


கொலை, சித்திரவதை, மற்றும் பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்காக டெல்வார் உசைன் சயீதி என்பருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பை அடுத்து ஜமாத்-இ-இசுலாமி கட்சி ஆதரவாளர்கள் காவல்துறையினருக்கு எதிராக வன்முறைகளில் இறங்கினர். வடக்கு கைபாந்தா மாவட்டத்தில் 2,000 இற்கும் அதிகமானோர் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கி அங்கிருந்த மூன்று காவல்துறையினரை உயிருடன் அடித்துக் கொன்றனர். நோக்காலி என்ற இடத்தில் இந்துக் கோயில் ஒன்று சேதமாக்கப்பட்டது. பல இந்துக்கள் தாக்கப்பட்டதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


வங்கதேச விடுதலையின் போது ஜமாத் கட்சி விடுதலைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தது. ஆனாலும், பாக்கித்தாந்சார்பு இராணுவத்தினர் நடத்திய போர்க்குற்றங்களுக்குத் தாம் துணை போகவில்லை எனக் கூறி வருகிறது.


விடுதலைப் போர்க் காலத்தில் அல்-பத்ர் என்ற குழுவுடன் இணைந்து சயீதி செயல்பட்டு வந்ததாகவும், விடுதலை கோரிய மக்களுக்கு எதிராகப் பல கொடுமைகளை இழைத்ததாகவும், பல இந்துக்களை மதம் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.


சயீதியுடன் சேர்த்து வங்காளதேசச் சிறப்பு நீதிமன்றம் இது வரையில் மூவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. கடந்த மாத ஆரம்பத்தில் அப்துல் காதர் முல்ல என்ற வேறொரு தலைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சனவரி மாதத்தில் முன்னாள் கட்சித் தலைவர் அபுல் கலாம் அசாத் என்பவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.


ஆளும் அவாமி லீக் தலைமையிலான வங்க அரசு இந்த சிறப்பு நீதிமன்றத்தை 2010 மார்ச் மாதத்தில் அமைத்தது. கிழக்கு பாக்கித்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி நாடாக வங்கதேசம் பிரிந்து சென்றபோது நடத்தப்பட்ட விடுதலைப் போரின் போது பாக்கித்தானுடன் தொடர்பு வைத்திருந்த வங்காள தேசத்தவர்கள் மீது இந்தச் சிறப்பு நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்தது. இப்போரின் போது கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்கள் பெரிய அளவில் நடந்திருந்தன. அப்போதைய மேற்குப் பாகிஸ்தானின் இராணுவத்தினர் பெருமளவு வங்கதேசப் பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். மில்லியன் கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.


மூலம்[தொகு]