உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசத்தின் எதிர்க்கட்சி அரசியல்வாதி சலாகுதீன் சவுத்திரிக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 1, 2013

1971 இல் பாக்கித்தானுடன் இடம்பெற்ற விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வங்காளதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அந்நாட்டின் போர்க்குற்ற சிறப்பு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


சலாகுதீன் காதர் சவுத்திரி என்பவருக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, அவற்றில் ஒன்பது குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். இவ்வழக்கு அரசியல் வஞ்சம் தீர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக தேசியக் கட்சியினரும், சவுத்திரியின் வழக்கறிஞர்களும் கூறியுள்ளனர்.


இவருக்கு எதிராக இனப்படுகொலை, கடத்தல், சிறுபான்மையின இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இந்துக்கள் பலரை கட்டாயமாக இசுலாமிய மதத்துக்கு மதம் மாற்றியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இவர் சிட்டகாங் பகுதியை சார்ந்த அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பாஸ்லூல் காதர் சவுத்திரி வங்கதேச விடுதலைக்கு முன் பாக்கித்தான் தேசியக்கட்சியின் உறுப்பினராக இருந்தவர். வங்கதேச விடுதலையை எதிர்த்து வந்தவர். இவர் மீதும் போர்க் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறும் போது சிறைச்சாலையில் மரணமடைந்தார்.


சவுத்திரியின் சொந்த இடமான சிட்டாகொங் மாவட்டத்தில் கலவரங்களை அடக்கும் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் சவுத்திரி ஆறு தடவைகள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.


ஆளும் அவாமி லீக் தலைமையிலான வங்க அரசு இந்த சிறப்பு நீதிமன்றத்தை 2010 மார்ச் மாதத்தில் அமைத்தது. கிழக்கு பாக்கித்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி நாடாக வங்கதேசம் பிரிந்து சென்றபோது நடத்தப்பட்ட விடுதலைப் போரின் போது பாக்கித்தானுடன் தொடர்பு வைத்திருந்த வங்காள தேசத்தவர்கள் மீது இந்தச் சிறப்பு நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்தது. இப்போரின் போது கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்கள் பெரிய அளவில் நடந்திருந்தன. அப்போதைய மேற்குப் பாகிஸ்தானின் இராணுவத்தினர் பெருமளவு வங்கதேசப் பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடிக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.


கடந்த மாதம் ஜமாட்-இ-இசுலாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா என்பவருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததை அடுத்து நாடெங்கும் ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.


மூலம்

[தொகு]