உள்ளடக்கத்துக்குச் செல்

வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 2, 2009

இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா "மெனிக் பாம்" தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.


இதனையடுத்து ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று இவ்வாறு முகாம்களில் இருந்து வெளியில் சென்றிருப்பதாக வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.


ஒரு நாள் முதல் பதினைந்து நாட்கள் வரையில் வெளியில் சென்று தங்கியிருந்துவிட்டு வருவதற்கான அனுமதி தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு உட்பட நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம் என்றும் தம்மிடம் முகாம் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் முகாம்களில் இருந்து வெளியில் வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


விடுவிக்கப்படுபவர்களுக்கு இருவிதமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது. குடும்பங்களுடன் இருப்பவர்கள் தமது பிறந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவிருப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் கிரமமாக பொலிஸில் பதிவு செய்ய வேண்டும். மற்றைய வகையான குழுவினர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முகாம்களுக்குத் திரும்பிவிட வேண்டும்.இதனை முன்னெச்சரிக்கையான உணர்வுடன் ஐ.நா. வரவேற்றுள்ளது. "இதனை விடுதலைக்கான ஒரு வழிமுறையாக நாம் பார்க்கிறோம். இது சிறப்பானது அல்ல. ஆனால் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்கள் வெளியே வருவதற்கான முதற்படியாக இது உள்ளது" என்று கொழும்பிலுள்ள ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் "த கார்டியன்" பத்திரிகைக்கு நேற்று தெரிவித்துள்ளார். ஜனவரி 31 இற்கு முன்னர் இடம்பெயர்ந்த சகலரையும் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதென அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்தக் காலக்கெடுவுக்குள் அதனை அரசுசெய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்று கோர்டன் வைஸ் கூறியுள்ளார்.


இதனை விடுதலைக்கான ஒரு வழிமுறையாக நாம் பார்க்கிறோம். இது சிறப்பானது அல்ல. ஆனால் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்கள் வெளியே வருவதற்கான முதற்படியாக இது உள்ளது.

—ஐநா பேச்சாளர் கோர்டன் வைஸ்

எவ்வாறாயினும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென தமிழர்களை அரசாங்கம் கேட்பது தொடர்பாக மனித உரிமை பணியாளர்கள் தொடர்ந்தும் விமர்சித்துள்ளனர். “அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் சென்று வரவேண்டுமென்றால் அதனை எவ்வாறு நடமாடும் சுதந்திரம் என்று வகைப்படுத்த முடியும்" என்று மனித உரிமைகளுக்கான ஆசிய நிலையத்தைச் சேர்ந்த சுகாஸ் சக்மா கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய தருணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கூட இலங்கை கொண்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் இது எவ்வாறு பதிலளிக்கும் கடப்பாடுடையதாக இருக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


அதேசமயம் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற் கொண்டே இந்த விடுதலை நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத சர்வதேச ஆய்வாளர் ஒருவர் கார்டியனுக்கு கூறியுள்ளார்.இதேவேளை, வன்னியிலிருந்து புல்மோட்டையில் முகாமில் தங்கியுள்ள அகதிகளும் நேற்று முகாமிலிருந்து வெளியே சென்றனர். எனினும் புல்மோட்டையில் இவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் இன்மையால் அப்பகுதிகளில் நடமாடினார்கள். புல்மோட்டை மக்களும் இவர்களை ஆதரித்து சில உதவிகள் செய்தனர். முகாம் சிறுவர்கள் புல்மோட்டை கடற்கரையில் விளையாடியதையும் காணமுடிந்தது. கடந்தஆறு மாதங்களுக்கு மேலாக இந்த அகதிகள் முகாம்களுக்குள்ளிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.


முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கு டிசம்பர் முதலாம் திகதி அனுமதியளித்து, இந்த முகாம்கள் திறந்தவெளி முகாம்களாக்கப்படும் என அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

மூலம்

[தொகு]