வாசிங்டன் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச் சூடு, 13 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டெம்பர் 17, 2013

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படை தளம் ஒன்றினுள் இராணுவ உடையில் வந்த நபர் ஒருவர் நேற்றுக் காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் இருவர், மற்றும் தாக்குதல் நடத்திய நபர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.


தாக்குதல் நடத்திய நபர் பின்னர் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் டெக்சாசு மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஆரன் அலெக்சிசு என்ற முன்னாள் கடற்படையாளர் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிகழ்வு நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 08:20 இற்கு இடம்பெற்றுள்ளது. இறந்தவர்கள் 46 முதல் 73 வயதானவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இத்தாக்குதல் கோழைத்தனமானது என அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


ஆரம்பத்தில் இத்தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருந்ததாகக் காவல்துறையினர் அறிவித்திருந்தாலும், பலத்த தேடுதலின் பின்னர் ஒருவரே இதனை நடத்தியுள்ளதாக அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


தாக்குதல் நடத்தியவரிடம் ஏஆர்-15 ரக பகுதி-தானியங்கி துப்பாக்கி, வேட்டைத்துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுடன் காவலாளி ஒருவரிடம் இருந்து பறித்த கைத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்துள்ளார். கடற்படைத்தளத்தினுள் நுழைவதற்கு நுழைவாணை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஆரன் அலெக்சிசு புத்த மதத்தை பின்பற்றுபவர் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். 2004-ம் ஆண்டு சியாட்டிலில் ஒரு கட்டிடத் தொழிலாளரின் கார் டயர்களை சுட்டு சேதப்படுத்தியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் 2007-2011 காலப்பகுதியில் கடற்படையில் மின்சாரப் பணியாளராகப் பணியாற்றினார். பல்வேறு சிறு முறைகேடுகளைத் தொடர்ந்து பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.


மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றும் இக்கடற்படைத்தளம் துப்பாக்கிச் சூட்டை அடுத்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் இராணுவ வீரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது. உலங்கு வானூர்திகளும் வரவழைக்கப்பட்டன. தலைநகரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமெரிக்க மேலவைக் கட்டடம், மற்றும் அருகில் உள்ள பள்ளிகள் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டன. ரேகன் தேசிய வானூர்தி நிலையத்தில் விமானங்கள் வெளியேறுவது சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.


வாசிங்டன் கடற்படைத்தளம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டதாகும். இது கடற்படையின் கட்டளை மையத்தின் தலைமையகமாகும். கடற்படைக்குத் தேவையான கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வடிவமைப்பது, வாங்குவது, கட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகள் இந்த வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.


மூலம்[தொகு]