உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 18, 2010

இலங்கையின் வட, கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து அடையாளச் சின்னங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக உயர்மட்ட அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


வடபகுதியில் விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னங்கள் உல்லாசப் பயணிகளின் மத்தியில் புகழ் பெற்றவையாக காணப்படுகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காக பெருந்தொகையானோர் அங்கு மக்கள் செல்வதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னங்களை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கமாட்டாது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. எனவே, இவற்றினை இல்லாதொழித்து குறித்த பகுதிகளில் உணவு விடுதிகள், மற்றும் உல்லாசத் தலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மைக்கேல் டெயிலிமிரர் இணையதளத்திற்கு உறுதிப்படுத்தினார். “புலிகளின் நினைவுச்சின்னங்களை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதில்லை என்பதே அரசின் கொள்கை. ஏற்கனவே இவற்றில் சில அழிக்கப்பட்டு விட்டன. விடுதலைப் புலிகளும், போரின் போது மக்களைப் பாதித்த வன்முறைகளும் முற்றாக மறக்கப்படவேண்டும்," என அவர் தெரிவித்தார்.


கண்டி-யாழ்ப்பாணத்தை இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் கிட்டத்தட்ட 300,000 உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்று திரும்பியிருக்கின்றனர் எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்[தொகு]