உள்ளடக்கத்துக்குச் செல்

வெனிசுவேலாவில் மோசடி விலை நிர்ணயத்தை தடுத்திட லாபத்திற்கு உச்சவரம்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 14, 2013

வெனிசுவேலாவில் சோசலிசப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் ஒரு கட்டமாக அந்நாட்டில் மோசடி விலை நிர்ணயத்தைத் தடுக்க தனியார் நிறுவனங்கள் பெறு இலாபத்திற்கு உச்சவரம்பு கொண்டுவர அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோ தீர்மானித்துள்ளார்.


நாட்டில் உள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் மக்களிடம் விற்கும் பொருட்களின் மீது பல மடங்கு வரை விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகிறது. இதனால் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதனை ஒழுங்கு படுத்தும் விதமாக இலாபத்திற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படும் என வெனிசுவேலாவின் தலைவர் மதுரோ அறிவித்துள்ளார்.


வெனிசுவேலா அரசுத்தலைவர் மதுரோ

பெரும் தனியார் நிறுவனங்கள் பல, வலதுசாரி அரசியலுக்கு ஆதரவாக, வெனிசுவேலா அரசிற்கெதிராக பொருளாதார ரீதியாக தாக்குதலை தொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக நியாயமற்ற முறையில் யூகத்தின் அடிப்படையில் விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளை லாபம் அடிப்பது. மேலும் பொருட்களை பதுக்கல் மற்றும் உற்பத்தி குறைப்பு மூலம் செயற்கையாக பற்றாக்குறையை உருவாக்கி, விலையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.


இதனை எதிர்கொள்ள நிக்கக்சு மதுரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பதுக்கலைத் தடுத்து நிறுத்த, உற்பத்தி மையத்தில் இருந்து விற்பனை நிலையம் வரை தொடர் ஆய்வு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதற்கென்று நுகர்வோர் சேவை மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் தொடர் கண்காணிப்பும் நடைபெற்று வருகிறது. அதே போல் அயல்நாட்டு நாணய பரிமாற்றம் குறித்தும் பல்வேறு புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் அரசின் சட்டதிட்டங்களுக்கு மாறாக செயல்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், தடைசெய்யப்பட்டும் வருகிறது.


இந்நிலையில் கடந்த வார இறுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணுச் சாதனங்களை விற்பனை செய்து வரும் டாக்கா என்ற சங்கிலித் தொடர் நிறுவனத்தில் அரசு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து 4200 பொலிவாருக்கு ($1 = 6.3 பொலிவார்) இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சலவை இயந்திரம் ஒன்று 47,000 பொலிவாருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. விதி மீறல்களில் ஈடுபட்டதாக நிறுவனத்தின் பல்வேறு மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் வேறொரு தனியார் வணிக நிறுவனம் அரசு நிறுவனம் ஒன்று உற்பத்தி செய்த கணினிகளை அதிக விலை வைத்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த நடவடிக்கைகளை அடுத்து ஜேவிசி போன்ற நிறுவனங்கள் விலையைக் குறைத்து நியாயமான விலையில் விற்பனை செய்ய முன்வந்தன. மக்கள் போட்டி போட்டுக் கொண்டு நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். வாலின்சிகாவில் உள்ள ஒரு டாக்கா நிறுவனத்தில் மக்கள் கடையை உடைத்து உள்ளிருந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். இச்சூறையாடலில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அரசின் அதிரடி சோதனைக்குப் பயந்து சில பெரும் நிறுவனங்கள் தங்களின் கடைகளை இழுத்து மூடியுள்ளன.


இதே வேளையில் சாம்சங் நிறுவனத்துடன் வெனிசுவேலா அரசு இணைந்து தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், குளிர்நசாதனப் பெட்டிகள், தொலைபேசிகள், மற்றும் டேப்லட் கணினிகளை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

மூலம்

[தொகு]