வெனிசுவேலா அரசுத்தலைவர் மதுரோவின் வெற்றியை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 9, 2013

வெனிசுவேலா அரசுத்தலைவர் நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளர் என்ரிக் கேப்ரில்ஸ் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


நிகோலஸ் மதுரோ

வெனிசுவேலாவில் கடந்த 1999ம் ஆண்டு முதல் மக்களின் பெரும் ஆதரவுடன் அரசுத்தலைவரானார் ஊகோ சாவேசு. இவர் கடந்த மார்ச் 5 இல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய அரசுத்தலைவருக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் சாவேசால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட அவரின் ஆதரவாளரான நிக்கோலஸ் மதுரோ அரசுத்தலைவர் வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து அமெரிக்க ஆதரவாளரான என்ரிக் கேப்ரில்ஸ் போட்டியிட்டார். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றார்.


இதையடுத்து, மதுரோவின் வெற்றியை ஏற்க முடியாது எனக் கூறி கேப்ரில்சின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் இறங்கினர். அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெனிசுவேலாவில் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதேநேரம், கேப்ரில்ஸ் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்களின் எதிர்ப்பின் காரணமாக அடங்கியது.


இதன்பின், மதுரோவின் வெற்றி செல்லாது என்றும், வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி வேட்பாளர் கேப்ரில்ஸ் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வெனிசுவேலா நாட்டு தேர்தல் ஆணையம் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்தியது. இதில் மதுரோவின் வெற்றியைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. இருப்பினும், இம்முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத என்ரிக் கேப்ரில்ஸ், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி மதுரோவின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கேப்ரில்ஸ் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் கிடையாது. எனவே, அவர் தாக்கல் செய்துள்ள மனுவினை நிராகரித்து உத்தரவிடுவதாக தீர்ப்பளித்தார்.


மூலம்[தொகு]