உள்ளடக்கத்துக்குச் செல்

வெனிசுவேலா தலைவர் ஊகோ சாவெசு தனது 58 வது அகவையில் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 6, 2013

14 ஆண்டுகள் பதவியில் இருந்த வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் ஊகோ சாவெசு நேற்றுக் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 58 ஆகும்.


ஊகோ சாவெசு (2005)

கடந்த ஈராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சாவெசுவிற்கு கூபா நாட்டில் பல தடவைகள் சத்திர சிக்கிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஊகோ சாவெசு இறந்த கரக்காசு மருத்துவமனை அருகே நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.


ஒரு புரட்சியாளராகத் தன்னை அறிவித்துக் கொண்ட ஊகோ சாவெசு அமெரிக்க ஆதிக்கவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அமைப்புகள் துளிர்விடக் காரணமாக அமைந்தவர்.


சாவெசுவின் மறைவை அடுத்து, 30 நாட்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதுவரையில் நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக பிரதித் தலைவர் நிக்கலாசு மதூரோ பதவியில் இருப்பார் என வெளியுறவுத்துறை அமைச்சர் எலியாசு சாவுவா அறிவித்துள்ளார். ஆளும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவராகவும் மதூரோ விளங்குவார். சாவெசுவின் "புரட்சிகர, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, சோசலிசக்" கொள்கைகளைத் தாம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்போவதாக நிக்கலாசு மதூரோ அறிவித்துள்ளார்.


கடந்த அக்டோபரில் நான்காவது தடவையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாவெசு முறைப்படி பதவியேற்க அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. கடந்த பல மாதங்களாக அவர் எவ்வித பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை.


முன்னாள் இராணுவ வீரரான ஊகொ சாவெசு 1992 ஆம் ஆண்டில் அவர் வழிநடத்தித் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்புப் புரட்சி ஒன்றின் மூலம் புகழ் பெற்றார். இரண்டாண்டுகள் சிறையில் கழித்த அவர், சிறையில் இருந்து மீண்டதும் தீவிர அரசியலில் இறங்கினார். 1998 தேர்தலில் வெற்றி பெற்று அரசுத் தலைவரானார். வறிய மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றார். நாட்டின் எண்ணெய் வளத்தை நிருவகிக்க சோசலிச நடைமுறைகளைக் கொண்டு வந்தார். ஆனாலும், இவர் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதாகவும், நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குக் கொண்டு செல்வதாகவும் இவர் மீது எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தின.


இவருக்கு எதிராக 2002 ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று இடம்பெற்றது தோல்வியில் முடிந்த இப்புரட்சியை அமெரிக்காவே வழி நடத்தியதாக சாவெசு அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார்.


ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அதிகாரபூர்வமான இறுதி நிகழ்வுகளில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்வர் என நம்பப்படுகிறது.


மூலம்[தொகு]