உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்க பிரித்தானியா முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 17, 2011

பிரித்தானியாவுக்கு வேலை வாய்ப்பிற்காகச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதத்தில், அவர்களுக்கான வேலைகள் பட்டியலில் பல பிரிவுகளை பிரித்தானியா அரசு குறைந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் பிரித்தானியாவுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகும். இந்தத் திருத்தம் கடந்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி பிரித்தானியாவுககுச் செல்கின்றனர். இவர்களுக்கான வேலைகள் பட்டியல் ‘ஷார்டேஜ் ஆக்குபேஷன் லிஸ்ட்’ என அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் உள்ள வேலைகளுக்கான மிகத்திறன் வாய்ந்த நபர்கள், இரண்டாம் நிலை விசா மூலம் பிரித்தானியா செல்லலாம்.


இந்நிலையில், இப்பட்டியலில் இடம்பெற்றிருந்த உயர்நிலைக் கல்விப் பிரிவில் உயிரியல் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான பேச்சு மற்றும் மொழி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், கண் மருத்துவர்கள் ஆகிய பணியிடங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கம் புலம்பெயர்தல் பற்றிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் (செப்டம்பரோடு முடிந்த காலாண்டில்), வேலையில்லாதோர் பட்டியலில், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். வேலை தேடுவோருக்கான உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கையில், 5,300 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது, 16 லட்சம் பேர் உதவித்தொகை பெறுகின்றனர். வேலையில்லாதோரில், 16 முதல் 24 வயது வரையில் உள்ளவர்கள் மட்டும் 10 லட்சத்து 20 ஆயிரம் பேர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும், வேலையில் இருந்து வெளியேறியவர்கள் 67 ஆயிரம் பேர். வேலையில்லாதோரில் பெண்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், 43 ஆயிரம் பேர் வேலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது, 10 லட்சத்து ஒன்பதாயிரம் பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது 1988க்குப் பின், மிக அதிகளவு என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்

[தொகு]