உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மக்கள் போராட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

செவ்வாய், சனவரி 18, 2011

இலங்கையில் சென்ற இரு வாரங்களாக இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டோர் தமக்கான நிவாரணங்கள் கிடைக்கவில்லை எனக் கேட்டு மட்டக்களப்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கிராமத்தில் அரசு அலுவலகம் ஒன்றை முற்றுகையிட்டு அதன் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் தமக்கு வேண்டியவர்களுக்கு உணவு மற்றும் நிவாரன உதவிகளை வழங்கியதாகவும், உண்மையில் பாதிக்கப்பட்டோருக்கு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து பலர் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மொத்தமாக 40 பேர் வரையில் வெள்ள அனர்த்தத்தில் கொல்லப்பட்டும், மேலும் நால்வர் காணாமல் போயுமுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்று திங்கட்கிழமை வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50,000 பேர் வரையில் முகாம்களில் தங்கியுள்ளனர். மழைவெள்ளத்தின் காரணமாக கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற நேர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முகாம்களில் தங்கியுள்ள பலரும் தம்முடன் தமது உடமைகள் அதனையும் எடுத்து வரவில்லை என்றும், இதனால் அவர்கள் அனைத்தையும் இழந்து விட்டதாக அவர்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.


ஆரையம்பதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4,000 பேருக்காக ஒதுக்கப்பட்ட அரிசி, மா, கூடாரங்கள் போன்ற நிவாரணப் பொருட்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை என அவர்கள் முறையிட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


பலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும், உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலிலேயே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் உணவுப் பொருட்களைக் கையாடி தமக்கு வேண்டியவர்களுக்குக் கொடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


நாட்டின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் சனவரி மாத வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உணவுத்தானியங்கள் சேதமடைந்தும், கால்நடைகள் இறந்தும் உள்ளன.


பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக ஐநாவின் மனிதாபிமான உதவி பணிகளுக்கான தலைமைச் செயலர் கத்தரின் பிராக் நாளை புதன்கிழமை அன்று இலங்கை வரவிருக்கிறார்.


மூலம்

[தொகு]