ஷேக்ஸ்பியரினால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் புதிய நாடகம் வெளியிடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 17, 2010


உலகப் புகழ் பெற்ற ஆங்கில இலக்கிய கர்த்தாவான வில்லியம் ஷேக்ஸ்பியரால் பகுதியளவிலாவது எழுதப்பட்டது என்று கூறப்படும் சர்ச்சைக்குரிய "டபுள் ஃபோல்ஸ்ஹூட்" (Double falsehood) என்ற நாடக இலக்கியம் ஒன்று ஆர்டன் என்ற பிரசுர நிறுவனத்தால் திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.


வில்லியம் ஷேக்ஸ்பியர்

இந்த நாடகம் ஷேக்ஸ்பியரின் படைப்புதான் என்று கல்விமான்களின் அனுமதி கிடைத்த பின்ன்ரே இந்த நாடகம் வெளியிடப்பட்டுள்ளது.


'டபுள் ஃபால்ஸ்ஹுட்' என்ற இந்த நாடகம் ஜோன் பிளெட்ச்சர் என்ற வேறொரு நாடகாசிரியரினால் எழுதப்பட்டது. இந்நாடகம் 18ம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியரின் நாடகத்தைத் தழுவியது என்ற விளம்பரத்துடன் அரங்கேற்றப்பட்டது. ஆனாலும் இது ஒரு ஏமாற்று வேலை என அன்று இந்நாடகம் நிராகரிக்கப்பட்டிருந்தது.


ஆனால் தற்போது இந்த நாடகத்தை மீளாய்வு செய்த இலக்கிய நிபுணர்கள், இதனை எழுதியது ஷேக்ஸ்பியர்தான் என்றும், அதனை ஜோன் பிலெட்ச்சர் என்பவருடன் சேர்ந்து அவர் இதனை எழுதியுள்ளார் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். மிக நீண்டகாலமாக தொலைந்து போனதாகக் கருதப்பட்ட ஷேக்ஸ்பியரின் கார்டேனியோ என்ற நாடகத்தின் தழுவலே இது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


மொழிச் செறிவிலும், கற்பனை வளத்திலும், உருவக வர்ணனையிலும் இந்த நாடக இலக்கியம் மிகவும் செழுமையாக உள்ளது.


எட்டாம் ஹென்றி, டூ நோபில் கின்ஸ்மன் ஆகிய இரண்டு நாடகங்களை ஷேக்ஸ்பியர் பிளெட்ச்சருடன் சேர்ந்து எழுதியிருந்தது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.


டபிள் ஃபோல்ஸ்வுட் என்ற இந்த நாடகம் 1610களில் எழுதப்பட்டிருக்கிறது என நோட்டிங்கம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹமண்ட் தெரிவித்தார். 1613 ஆம் ஆண்டில் குறைந்தது இரு தடவைகள் இது மேடையேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்[தொகு]