உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிரோஷிமா அணுகுண்டு நினைவுநாள் நிகழ்வுகளில் அமெரிக்கா முதற்தடவையாகப் பங்குபற்றியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 7, 2010

சப்பானின் இரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டுத்தாக்குதல் நடத்தியதன் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று வெள்ளிக்கிழமை நினைவுகூரப்பட்டது. இதில் முதற்தடவையாக அமெரிக்காவின் பிரதிநிதி ஒருவர் கலந்துகொண்டுள்ளார்.


இரோசிமா மீது அணுகுண்டுக் தாக்குதல்

இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் 1945 இல் அமெரிக்க விமானம் இரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசியதில் கிட்டத்தட்ட 140,000 பேர் கொல்லப்பட்டோ அல்லது உயிரிழந்தோ போயுள்ளனர். மூன்று நாட்களின் பின்னர் ஆகஸ்ட் 9 இல் சப்பானின் வேறொரு நகரான நாகசாக்கி மீது அமெரிக்கா போட்ட அணுகுண்டை அடுத்து சப்பான் சரணடைந்தது.


சப்பானுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோன் கீஸ் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டது, சப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா இரோசிமாவுக்கு செல்வார் என்பதை உறுதிப்படுத்தும் சமிக்ஞையாகவே உள்ளது.


ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டார். ஐநா செயலர் ஒருவர் இந்நிகழ்வில் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும்.


"வாழ்க்கை மிகவும் சுருக்கமானது, ஆனால் நினைவுகளோ மிக நீண்டவை," என அவர் கூறினார்.


74 நாடுகளைச் சேர்ந்த 55,000 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில் ”அணுவாயுதங்கள் அற்ற உலகத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.


அணுவாயுதங்களால் தாக்கப்பட்ட ஒரேயொரு நாடு சப்பான் ஆகும்.


அணுகுண்டை வீசியமைக்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என சில சப்பானியர்கள் கேட்டுக் கொண்டாலும், அப்படி நடக்கும் சாத்தியங்கள் இல்லை என பிபிசி செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

மூலம்

[[பகுப்பு:ஜப்பான்]