13ம் திருத்தத்துக்கு மேலதிகமாகக் கொடுப்பதாக கூறவில்லை, மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 31, 2012

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13ம் திருத்தச்சட்டத்திற்குக் கூடுதலாக தீர்வு வழங்க விருப்பதாகத் தாம் எப்போது இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை என இலங்கையின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களை நேற்று காலையில் அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச சந்தித்த போது, "13ம் திருத்தத்திற்கு மேலதிகமாகத் தீர்வு வழங்கப்போவதாக இந்தியாவுக்கு உறுதி அளித்தீர்களா?" எனக் கேட்டபோது அவர், "இல்லை, இல்லை, நான் எப்படி அப்படி ஒரு உறுதியைத் தரமுடியும்? இதுபற்றிய இறுதி முடிவுகளை எடுப்பதற்கு நாடாளுமன்றத்திற்கே விட்டு விட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அரசு சார்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்து அனுப்பி விட்டேன். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜேவிபியும் பிரதிநிதிகளை அனுப்பவில்லை.அதுபோலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அனுப்பவில்லை," என்று கூறினார்.


நிச்சயமாக நாங்கள் காவல்துறை அதிகாரங்களைக் கொடுக்க முடியாது. அப்படி அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பென்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சனாதிபதி கூறினார்.


இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கு இரு வாரங்களுக்கு முன்னர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]