உள்ளடக்கத்துக்குச் செல்

14 ஆண்டுகளின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்த காஸ்ட்ரோ முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 9, 2010

14 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு கியூபாவின் அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அழைப்பு விடுத்திருக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவிருக்கும் மாநாட்டில் கியூபாவின் பொருளாதார நிலை முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்படும் என காஸ்ட்ரோ தெரிவித்தார்.


ராவுல் காஸ்ட்ரோ

தலைநகர் அவானாவில் வெனிசுவேலாவின் அரசுத் தலைவர் ஊகோ சாவேசுடனான சந்திப்பை அடுத்து ராவுல் காஸ்ட்ரோ இந்த அறிவிப்பை விடுத்தார்.


ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தப்பட வேண்டும். ஆனால், இது பல தடவைகள் பின்போடப்பட்டு வந்துள்ளது.


2006 ஆம் ஆண்டில் தனது சகோதரர் பிடெல் காஸ்ட்ரோவிடம் இருந்து ஆட்சியை ஏற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வந்துள்ளது.


அனைத்துக் கியூபா மக்களும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் மகக்ளைக் கேட்டுக் கொண்டார். புரட்சியாளர்கள், தலைமைத்துவம், மற்றும் பொது மக்கள் ஆகியோரின் ஒற்றுமையிலேயே சோசலிசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது என அவர் கூறினார்.


கடந்த செப்டம்பரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரசு தொழிலாளர்கள் தனியார் துறையில் வேலை தேடுவதற்கு ஊக்கமளிக்கப்பட்டார்கள். தனியார் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என காஸ்ட்ரோ அறிவித்தார். சிறு வர்த்தக நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கமர்த்துவதற்கும், பணம் கடன் வாங்கவும், அரசுத் திணைக்களங்களுக்கு தமது சேவைகளை வழங்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள் என அவர் மேலும் கூறினார்.


கடந்த சில ஆண்டுகளாக கியூபாவின் பெரும் ஏற்றுமதிப் பொருளான நிக்கலின் விலை உலக அளவில் சரிந்தமை, சுற்றுலாத் துறையில் வீழ்ச்சி போன்றவை கியூபாவின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. அத்துடன் 48 ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.


மூலம்

[தொகு]