157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 3 ஆகத்து 2013: ஆத்திரேலியா வரும் படகு அகதிகளை நவூருவும் ஏற்கும், கெவின் ரட் புதிய உடன்பாடு
- 20 சூலை 2013: நவூரு தீவில் ஆத்திரேலியா நடத்தும் அகதி முகாமில் வன்முறை வெடித்தது
- 23 நவம்பர் 2012: நவூரு தடுப்பு முகாம் 'கொடியதும் இழிவானதும்' என பன்னாட்டு மன்னிப்பகம் அறிக்கை
- 14 நவம்பர் 2012: ஆத்திரேலியாவின் நவூரு அகதிகள் முகாமின் நிலைமை 'சகிக்க முடியாதது', நவி பிள்ளை கருத்து
சனி, ஆகத்து 2, 2014
இந்தியாவில் இருந்து கடல் வழியாக ஆத்திரேலியாவை நோக்கி வந்த 157 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களையும் ஆத்திரேலிய அரசு நவூரு தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பியுள்ளது. இவர்களில் 50 பேர் குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர்.
இந்தியாவில் இருந்து 157 பேருடன் கடந்த சூன் மாதத்தில் புறப்பட்ட படகு ஆத்திரேலியக் கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் சூலை ஆரம்பத்தில் ஆத்திரேலிய கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டு ஆத்திரேலிய சுங்கத் திணைக்களப் படகொன்றில் ஒரு மாதகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் கடந்த வாரம் கொக்கோசுத் தீவுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உடனடியாக மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கேர்ட்டின் தடுப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இவர்கள் அனைவரும் நவூரு தீவுக்கு நேற்றிரவு அனுப்பப்பட்டனர்.
இவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் நோக்கில் இந்திய குடிவரவு அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் இந்திய அதிகாரிகளை சந்திக்க மறுத்து விட்டதை அடுத்து அனைவரும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டதாக ஆத்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
இவர்களது அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரையில் மாதக்கணக்கில் நவூருவில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் இவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என ஸ்கொட் மொரிசன் கூறினார்.
“நவூருவுக்கு சென்றவர்கள் எவரும் இனிமேல் இந்தியாவுக்கு செல்ல முடியாமல் போகும்," எனத் தெரிவித்த மொரிசன், இவர்கள் ஆத்திரேலியாவிலும் குடியமர முடியாது. அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோரும், ஆத்திரேலியாவுக்குள் வர முடியாது. நவூருவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி, இவர்கள் நவூருவிலேயே குடியேற்றப்படுவர்," எனத் தெரிவித்தார். இந்திய அதிகாரிகளை சந்திக்க அகதிகளின் வழக்கறிஞர்களே அவர்களைத் தடுத்துள்ளனர் என நம்பப்படுவதாக அவர் கூறினார்.
157 பேரில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களை இந்தியா திரும்ப எடுத்துக் கொள்ளும் என இந்தியாவுடன் ஆத்திரேலியா உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அகதிகள் அனைவரையும் ஆத்திரேலியாவில் குடியேற அனுமதிக்க வேண்டுமென பசுமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் சேரா ஆன்சன்-யங் பரப்புரை செய்திருந்தார். குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், "இக்கட்டான" மற்றும் "கோழைத்தனமான நடவடிக்கைகளில் மிகவும் பெயர் பெற்றவர் என பசுமைக் கட்சி விமர்சித்துள்ளது.
மூலம்
[தொகு]- Immigration Minister Scott Morrison takes hard line: 157 sent to Nauru, தி ஆஸ்திரேலியன், ஆகத்து 2, 2014
- 157 Tamil asylum seekers sent from Curtin detention centre to Nauru, ஏபிசி, ஆகத்து 2, 2014
- குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கோழை: விமர்சிக்கும் பசுமைக் கட்சி, தமிழ்வின், ஆகத்து 2, 2014