168 ஆண்டுகள் பழமையான 'நியூஸ் ஒஃப் த வேர்ல்ட்' பத்திரிகை மூடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 8, 2011

'நியூஸ் ஒஃப் த வேர்ல்ட்' என்ற பிரித்தானியாவின் புகழ்பெற்ற சிறுபக்க வார இதழை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் மூடி விடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் நியூஸ் இன்டர்னேசனல் நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் மேர்டொக் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இப்பத்திரிகை மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்தே பத்திரிகை மூடப்படுகிறது.


1843, அக்டோபர் 1 இல் வெளிவந்த முதலாவது 'நியூஸ் ஒஃப் த வேர்ல்ட்' பத்திரிகையின் முன்பக்கத் தோற்றம்

168-ஆண்டுகள் பழைமையான இப்பத்திரிகை பிரித்தானியாவின் அரசியல்வாதிகள், திரையுலகத்தவர்கள், அரச குடும்பத்தினர் போன்ற பிரபலங்களின் கைத்தொலைபேசிகளை அழைப்புகளை இரகசியமாகப் பதிவு செய்து பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


தாம் கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து நான்காயிரத்துக்கும் அதிகமானோர் பற்றிய தகவல்கள் உள்ளதாக காவல்துறையினர் நேற்று அறிவித்துள்ளனர். இந்த பத்திரிகை அத்து மீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கூறினர்.


பரபரப்புச் செய்திகளுக்குப் பேர் போன 'நியூஸ் ஒஃப் த வேர்ல்ட்' வாரத்துக்கு 2.8 மில்லியன் பிரதிகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.


இவ்வாரம் வெளிவரும் கடைசி இதழில் விளம்பரங்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாதெனக் கூறிய ஜேம்ஸ் மேர்டொக், பதிலாக விளம்பரப் பக்கங்கள் அனைத்தும் தரும ஸ்தாபனங்களுக்கு அளிக்கப்படும் என்றார். பத்திரிகை விற்பனையில் பெறப்படும் பணம் முழுவதும் நல்நோக்கங்களுக்குச் செலவிடப்படும் என்றும் கூறினார். பத்திரிகை மூடப்படும் நிகழ்வுக்கு பெரும் வேதனை அடைந்து உள்ளதாக உரிமையாளர் மேர்டோக் தெரிவித்தார்.


பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரியும் 200 இற்கும் மேற்பட்டோர் தமது ஏனைய நிறுவனங்களில் உள்ள வேலைகளுக்கு விண்னப்பிக்கலாம் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


நியூஸ் நிறுவனங்களின் உரிமையாளரும் ஜேம்ஸ் மேர்டொக்கின் தந்தையுமான ஆத்திரேலியரான ரூப்பர்ட் மேர்டொக்கின் நியூஸ் கார்ப்பரேசன், சன், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ், பொக்ஸ் நியூஸ், வால் ஸ்ஷீட் ஜர்னல், நியூயோர்க் போஸ்ட் உட்படப் பல பத்திரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.


மூலம்[தொகு]