2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்: சதித் திட்டத்தில் ஈடுபட்ட அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 9, 2013

2001 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த போராளி ஒருவருக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று தூக்கிலிடப்பட்டார்.


முகம்மது அப்சல் குரு என்பவர் இன்று தில்லியின் அருகேயுள்ள திகார் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இந்திய-நிருவாகத்தில் உள்ள காஷ்மீரில் குழப்பம் ஏற்படலாம் எனக் கருதி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


2001 தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்ட அச்சம்பவத்தில் தாம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அஃப்சல் குரு எப்போதும் கூறி வந்துள்ளார்.


2001 டிசம்பர் 13 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தை ஊடுருவிய ஐந்து போராளிகள் பூந்தோட்டக் காவலாளி ஒருவரையும், எட்டு காவல்துறையினரையும் சுட்டுக் கொன்றனர். போராளிகள் அனைவரும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


இத்தாக்குதலை பாக்கித்தானின் ஆதரவில் இயங்கும் ஜையிஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பே நடத்தியது என இந்தியா குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டை பாக்கித்தான் மறுத்து வந்தது.


இத்தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக முன்னாள் பழ வியாபாரி அஃப்சல் குரு, மற்றும் சவுக்காத் உசைன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், மேன்முறையீட்டை அடுத்து இரண்டாமவரின் தண்டனை 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும் இருவர் போதிய ஆதாரமின்மையால் விடுவிக்கப்பட்டனர். ஜையிஷ்-இ-முகம்மது குழுவில் உறுப்பினரான குரு மீது தாக்குதலுக்கு ஆயுதங்கள் பெற்றுக் கொடுத்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டது.


இந்தியாவில் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது இது இரண்டாவது தடவையாகும். முன்னர் 2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் என்ற பாக்கித்தானியருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 21 இல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.


மூலம்[தொகு]