2010 பொதுநலவாயப் போட்டிகள்: இலங்கைக்கு முதல் தங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 14, 2010

புதுடில்லியில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை தனது முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. குத்துச் சண்டைப் போட்டியில் 56 கிலோகிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இலங்கைக்கான முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.


72 ஆண்டுகளின் பின்னர் பொதுநலவாயப் போட்டி ஒன்றில் குத்துச்சண்டையில் முதலாவது தங்கப் பதக்கத்தை இவர் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1933 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 56 கிலோ எடைப்பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது. அதன்பின்னர் 1950 ஆம் ஆண்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வன்னியாராய்ச்சி வேல்சைச் சேர்ந்த சீன் மெக்கோல்ட்ரிக் என்பவரை 16-14 புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டினார். 1995, 1996, 2004, 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டைப் போட்டிகளில் மூன்று தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் மஞ்சு வன்னியாராட்சி பெற்றுள்ளார்.


இதற்கிடையே மகளிருக்கான 20 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் ஆறாவது இடத்தைப் பெற்ற ராணி யாதவ் என்ற இந்திய வீராங்கனை முதல் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். அவர் இந்தப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான இரண்டாவது பரிசோதனையிலும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரியவந்தால் அவர் போட்டிகளில் பங்கு பெற இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்படக் கூடும்.


மூலம்