உள்ளடக்கத்துக்குச் செல்

2011 ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 21, 2011

ஐநா பொதுச்சபையின் 2011ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நியூயோர்க்கில் நேற்று ஆரம்பமானது. 130 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் கடந்த 13ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டாலும் கூட்டத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளான உலகத் தலைவர்களின் உரைகள், பொது விவாதம் போன்றவை நேற்று ஆரம்பமானது. இவை வரும் 27ம் திகதி வரை நடக்க உள்ளன. இந்தாண்டு ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தில் பல்வேறு உலக விவகாரங்கள் விவாதிக்கப்பட இருந்தாலும், முக்கியமான ஐந்து விவகாரங்கள், அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது


அவற்றுள் பாலத்தீனத்துக்கு ஐநாவில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வேண்டும் என, அந்நாட்டின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முன்வைத்துள்ள கோரிக்கை, மேலும் அரபுலக நாடுகளின் எழுச்சி நிலை, லிபியா அரசு சார்பில் எதிர்ப்பாளர்களின் இடைக்கால அரசின் பிரதிநிதி பங்கேற்பதுடன அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றம், சர்வதேச சமூகத்தில் புதிய லிபியா அரசுக்கு ஆதரவு, முன்னாள் தலைவர் கடாபியைத் தேடும் பணியை முடுக்கி விடுதல் தொடர்பான விவாதங்கள், சிரியாவுக்கு எதிராக பொருளாதார தடை குறித்த விவாதங்கள், புதிய நாடாக அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ள தெற்கு சூடானின் பங்கேற்பு என்பனவே அவை.


அதே நேரம் இந்தியப் பிரதமர் மன்மோகன் ஐநா பாதுகாப்புப் பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் குறித்து வாதாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்[தொகு]