உள்ளடக்கத்துக்குச் செல்

2012 ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 28, 2012

இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 09:00 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது.


ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனின் கிழக்கே ஸ்ட்ராட்ஃபோர்ட் ஒலிம்பிக் பூங்கா பகுதியில் ஒலிம்பிக் ஆரம்ப விழாவைக் காண 60,000 இற்கும் மேலானவர்கள் திரண்டிருந்தனர். பிரித்தானிய மகாராணி, அவரது குடும்பம், அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர், ஐரோப்பிய மன்னர் குடும்பத்தினர், மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.


மொத்தம் 17 நாள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 204 நாடுகளைச் சேர்ந்த 10,000 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். லண்டன் மாநகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்.


கிரேக்கத்தில் இருந்து தொடங்கிய ஒலிம்பிக் ஒளிப்பந்தத்தின் ஓட்டம் லண்டனை சுற்றி வந்த பின்னர், தேம்சு நதியில் அலங்கரிக்கப்பட்ட படகில் வலம் வந்தது. இந்த படகில் உலக தரத்தில் முன்னணியில் இருக்கும் படகு போட்டி வீரர்கள் எடுத்து வந்தனர்.


பிரித்தானிய அரசி எலிசபெத் ஜேம்ஸ்பாண்டுடன் ஒரு உலங்கு வானூர்தியில் இருந்து பாரசூட் மூலம் பறந்து விளையாட்டு அரங்கில் வருவது போன்ற காட்சி திரையிடப்பட்டது. அந்தக்காட்சியை அடுத்து, அரசியும், இளவரசர் பிலிப்பும் சிறப்பு நுழைவாயில் வழியாக அரங்குக்குள் வரும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கலை நிகழ்ச்சிகளை அடுத்து பங்கேற்கும் நாட்டு அணிகள் அகர வரிசைப்படி அரங்கினுள் வந்தனர். ஒலிம்பிக் மரபின்படி, முதல் நாடாக கிரேக்கமும், கடைசியாக போட்டிகளை நடத்தும் ஐக்கிய இராச்சியமும் தமது அணிகளுடன் அரங்கில் நுழைந்தனர்.


லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை எலிசபெத் அரசி முறைப்படி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து வாணவேடிக்கைகளுடன் தொடக்க விழா இனிதே முடிந்தது.


முதலாவது தங்கம்


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை சீன வீராங்கனை யி சில்லிங் துப்பாக்கி சுடுதலில் தட்டிச் சென்றார். இன்று இடம்பெற்ற துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் சீனாவின் யி சில்லிங் 502.9 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார். போலந்தைச் சேர்ந்த சில்வியா 502.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், சீனாவின் யூ டான் 501.5 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


மூலம்

[தொகு]
விக்கியூடக நடுவம்
விக்கியூடக நடுவம்
இலண்டன் ஒலிம்பிக்சு தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .