2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 1, 2012

இலண்டனில் 2012 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க மற்றும் இறுதி நிகழ்ச்சிகளை இந்தியா புறக்கணிக்காது என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.


இலண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் விளம்பரதாரராக உள்ளது. இந்நிறுவனம் போப்பால் நச்சு வாயுக் கசிவிற்கு காரணமான யூனியன் கார்பைடு ஆலையை வாங்கியுள்ளதால் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்நிறுவனத்தை எதிர்த்து வந்தது.


மேலும் இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் டவ் நிறுவனத்தை விளம்பரதாரராகச் சேர்க்க கூடாது என வலியுறுத்தி பன்னாட்டு ஒலிம்பிக் சங்கத்திற்குக் கடிதம் அனுப்பியிருந்தது. பன்னாட்டு ஒலிம்பிக் சங்கம் இந்நிறுவனத்தை விளம்பரதாரர் ஒப்பந்தத்திலிருந்து நீக்க இயலாது என கூறிவிட்டது.


இந்நிலையில், டெள விவகாரத்தில் ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்க மாட்டோம். அவ்வாறு செய்தால் போட்டிக்காக தயாராகி வரும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய சோகமான நிகழ்வாகிவிடும் என்று ஐஓஏ பொதுச் செயலர் ரந்திர் சிங் தெரிவித்தார்.

போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டெü கெமிக்கல் நிறுவனத்தை ஒலிம்பிக் போட்டியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்தியா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. டெü நிறுவனத்தை நீக்காதபட்சத்தில் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்த நிலையில் "போட்டியை புறக்கணித்தால் அது போட்டிக்காக தயாராகிவரும் வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முன்னணி வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் தகுதிபெற்றுவிட்டது. அதனால் அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது," என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலர் ரந்திர் சிங் தெரிவித்தார்.


மூலம்[தொகு]