2013 உலக சதுரங்கப் போட்டித் தொடர் சென்னையில் தொடங்கியது, ஆனந்தும் கார்ல்சனும் மோதுகின்றனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 9, 2013

2013 உலக சதுரங்க இறுதிப் போட்டித் தொடர் இந்தியாவின் சென்னை மாநகரில் இன்று ஆரம்பமாகியது.


2008 ஆம் ஆண்டில் விசுவநாதன் ஆனந்த்
2010 ஆம் ஆண்டில் கார்ல்சன்

கடந்த ஆறு ஆண்டுகளாக சதுரங்க உலக சாம்பியனாக விளங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விசுவநாதன் ஆனந்தின் வெற்றிவாய்ப்பு அரிதே என சதுரங்க விற்பன்னர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவரை எதிர்த்துப் போட்டியிடும் நோர்வேயைச் சேர்ந்த மேக்னசு கார்ல்சன் சாம்பியன் பட்டத்தைப் பெறக்கூடும் எனப் பலர் ஆருடம் கூறியுள்ளனர்.


12 ஆட்டங்களைக் கொண்ட இத்தொடர் சென்னையில் தேனாம்பேட்டையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள ரீஜன்சி ஹோட்டலில் 350 தெரிவு செய்யப்பட்ட பார்வையாளர்களுடன் நடைபெறுகிறது. அத்துடன் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் உலகெங்கிலும் இருந்து பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


43 வயதாகும் விசுவநாதன் ஆனந்த் 2007 ஆம் ஆண்டு முதல் சாம்பியனாக உள்ளார். ஆனாலும் 22 வயதாகும் கார்ல்சன் சதுரங்கப் போட்டிகளில் உலக தரத்தில் முதலாவதாக உள்ளார். ஆனந்த் எட்டாவது தரத்திலேயே உள்ளார்.


இம்முறை போட்டிகள் 1972 ஆம் ஆண்டில் ஐசுலாந்தில் சோவியத் வீரர் பொரிசு ஸ்பாஸ்க்கிக்கிக்கும், 24 வயதான அமெரிக்க இளைஞர் பொபி ஃபிஷருக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியுடன் ஒப்பிடப்பட்டுப் பேசப்படுகிறது. அப்போது 24 ஆண்டுகளாக சோவியத் வீரர்களின் பிடியிலிருந்த சதுரங்க சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக பொபி ஃபிஷர் வென்றார்.


கார்ல்சன் சதுரங்கத்தின் ஒரு ஹாரி பொட்டர் என உருசியாவின் முன்னாள் சதுரங்க சாம்பியன் காரி கஸ்பாரொவ் தெரிவித்துள்ளார்.


12 ஆட்டங்களைக் கொண்ட இப்போட்டித் தொடரில் ஆட்டம் ஒன்றில் வெற்றி பெறுபவருக்கு ஒரு புள்ளியும், வெற்றி தோல்வி இன்றி முடிந்தால் ஒவ்வொருவருக்கு அரைப் புள்ளியும் வழங்கப்படும். முதன் முதலாக 6.5 புள்ளிகளைப் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். 12வது போட்டியில் இருவரும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால், ஒருவர் முதலாவது வெற்றி பெறும் வரை போட்டிகள் தொடரும். 12வது போட்டி நவம்பர் 26 ஆம் நாள் இடம்பெறும்.


இன்று தொடங்கிய முதலாவது ஆட்டத்தில் ஆனந்த் கருப்புக் காய்களுடன் ஆடத் தொடங்கினார். 16வது நகர்வில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

1.Nf3 d5 2.g3 g6 3.Bg2 Bg7 4.d4 c6 5.0-0 Nf6 6.b3 0-0 7.Bb2 Bf5 8.c4 Nbd7 9.Nc3 dxc4 10.bxc4 Nb6 11.c5 Nc4 12.Bc1 Nd5 13.Qb3 Na5 14.Qa3 Nc4 15.Qb3 Na5 16.Qa3 Nc4 ½–½


மூலம்[தொகு]