52 அரசியல் கைதிகளை விடுவிக்கவிருப்பதாக கியூபா அறிவித்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 8, 2010


52 அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு கியூபா ஒப்புதல் தந்திருக்கிறது. ஸ்பெயின், மற்றும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை அடுத்தே ஹவானா இந்த முடிவை அறிவித்திருக்கிறது.


5 கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஏனையோர் அடுத்த இரு மாதங்களில் விடுவிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


"இந்த முடிவின் மூலம் கியூபா ஒரு புதிய தசாப்தத்தினுள் நுழைந்திருக்கின்றது," என ஸ்பெயினின் வெளியுறவுத் துறை அமைச்சர் மிகுவேல் மரட்டீனோஸ் தெரிவித்தார்.


2003 ஆம் ஆண்டில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இவர்கள் அன்றைய பிடெல் காஸ்ட்ரோவின் அரசினால் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவரையும் தமது நாடு ஏற்றுக் கொள்ளும் என ஸ்பெயின் அறிவித்துள்ளது.


கடந்த பெப்ரவரியில் அரசியல் கைதி ஒர்லாண்டோ தமாயோ உண்ணாநோன்பிருந்து இரந்ததை அடுத்து அவர்களை விடுவிக்க வேண்டும் என கியூபா அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.


இவர்களை அரசியல் கைதிகளாக கியூபா அரசு எப்போது அறிவித்திருக்கவில்லை. அவர்கள் அன்றைய அமெரிக அரசினால் அனுப்பப்பட்ட கைக்கூலிகள் என அவர்கள் தெரிவித்து வந்துள்ளனர்.


இந்த 52 பேர் விடுதலையானவுடன் அங்குள்ள அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 110 ஆகக் குறையும் என கியூபாவின் மனித உரிமை பேணும் அமைப்பு தெரிவித்துள்ளது.


"இந்த விடுவிப்பை அடுத்து கியூபாவின் மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என நாம் நம்பவில்லை," என அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.


கடைசியாக 1998 ஆம் ஆண்டில் பாப்பாண்டவரின் வருகையை முன்னிட்டு கியூபா 101 அரசியல் கைதிகளை விடுவித்திருந்தது.


அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிடெல் காஸ்ட்ரோ 3,600 பேரை விடுவித்திருந்தார்.

மூலம்[தொகு]