உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 30, 2009


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சச்சிதானந்தன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர்.


இவர்கள் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை வழங்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.


இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்களாக இருந்துவந்த இவர்கள் கட்சித் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே விலகியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்சி தலைமைத்துவம் மக்களின் நலன் கருதி செயற்படுவதில்லை என பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.


அதேவேளை பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிய தமிழ் உத்தியோகத்தர்களை அமைச்சிலிருந்து செல்லுமாறு உயர் அதிகாரி ஒருவர் பணித்துள்ளதாகக் கல்வி அமைச்சின் அலுவலர் ஒருவர் வீரகேசரி செய்தியாளருக்குத் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை முன்வரவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.


இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது சிறுபான்மையினரின் உரிமைகளை பறித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்து கலாசார அமைச்சு, கிறிஸ்தவ அமைச்சு, முஸ்லிம் விவகார அமைச்சு என்பன பறிக்கப்பட்டுள்ளமை இதற்கு உதாரணம் என இது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.


இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின், பரிந்துரைகள், யுத்தத்தின் பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளன.


இந்தநிலையில் அரசாங்கம், வடக்கு கிழக்கு மக்களுக்கு 60 வருட போராட்டத்தின் பின்னரும் எவ்வித தீர்வுகளையும் வழங்குவதற்கு முன்வரவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூலம்

[தொகு]