உள்ளடக்கத்துக்குச் செல்

மாசசூசெட்ஸ் மாநில மேலவைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வி

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 21, 2010


ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் மாநிலத்துக்கான மேலவை (செனட்) பதவிக்கு நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளமை, குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


குடியரசுக் கட்சி வேட்பாளர் ஸ்கொட் பிரவுண்

குடியரசுக் கட்சியின் ஸ்கோட் பிரவுண், மக்களாட்சிக் கட்சியின் மார்த்தா கோக்லியைத் தோற்கடித்துள்ளார். 1972ம் ஆண்டுக்குப் பின் இந்த மாநிலத்திலிருந்து மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆகியுள்ளார் இவர்.


உள்நாட்டு கொள்கை திட்டங்கள் மீது இத்தேர்தல் முடிவின் தாக்கம் பற்றி ஒபாமாவின் அலுவலகம் ஆராயத் தொடங்கியுள்ளது.


இத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் வெற்றியானது செனட்டில் 60 ஆசனங்களைக் கொண்ட மக்களாட்சிக் கட்சியின் பெரும்பான்மை பலத்திற்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளரான கொக்லியின் தோல்வியானது அவரின் கட்சிக்கும் அதன் நிகழ்ச்சி நிரலுக்கும் பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வெற்றி மூலம் ஒபாமாவின் முக்கிய கொள்கையான சுகாதாரத்துறை சீர்திருத்தம் குறித்த திட்டங்களுக்கு இடைஞ்சல் தர செனட்டில் குடியரசுக் கட்சியினருக்கு போதிய வாக்குகள் கிடைத்துள்ளது.


அத்துடன் ஒபாமா பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடையவுள்ள நிலையில் அவரது கொள்கைகள் மக்களிடத்தில் வரவேற்பை பெறவில்லை என்பதற்கான தெரிவான சமிக்ஞையாகவும் இது கருதப்படுகிறது. மேலும் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கென்னடி குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்த இவ் ஆசனத்தை ஜனநாயகக் கட்சி இழந்திருப்பதும் அக் கட்சிக்கு அரசியல் ரீதியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


வெற்றி பெற்ற பின்னர் ஸ்கொட் பிரவுண் ஆற்றிய உரையில், அதிபர் ஒபாமாவின் திட்டங்களை விமர்சித்தார். அத்திட்டங்கள் வரிகள் அதிகரிக்கச் செய்யும், வேலையிடங்களை அழிக்கும், கடன்கள் அதிகரிக்கச் செய்யும் என்றார் அவர்.

மூலம்

[தொகு]