செர்பியப் போர்க் குற்றவாளி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 26, 2011

1992-95 காலப்பகுதியில் இடம்பெற்ற பொசுனிய உள்நாட்டுப் போரின் போது குற்றங்கள் இழைத்ததாக ஐநாவினால் குற்றம் சாட்டப்பட்ட ராட்கோ மிலாடிச் செர்பியாவில் கைது செய்யப்பட்டார்.


முன்னாள் செர்பிய இராணுவத் தலைவரான மிலாடிச், அகவை 69, கைது செய்யப்பட்டதை செர்பிய அரசுத் தலைவர் பொரிஸ் டாடிச் இன்று நடைபெற்ற செய்தியாலர் மாநாட்டில் உறுதி செய்தார். 1995 ஆம் ஆண்டில் செரெபிரெனிக்காவில் குறைந்தது 7,500 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு இவரே பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இவரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக த ஹேக் நகருக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத்தலைவர் டாடிச் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை காலை வொச்வோடினா என்ற செர்பியாவின் வடக்கு மாகாணத்தில் மிலாடிச் கைது செய்யப்பட்டார்.


இவரது கைது மூலம் நாம் செர்பிய வரலாற்றின் ஒரு பகுதியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம், என அவர் கூறினார். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் சேர்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


தலைநகர் பெல்கிரேடில் வாழ்ந்து வந்த மிலாடிச் 2001 ஆம் ஆண்டில் முன்னாள் யூகொசுலாவிய அரசுத்தலைவர் சிலபடான் மிலொசேவிச் கைது செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவானார். சூலை 2008 ஆம் ஆண்டில் மற்றும் ஒரு போர்க் குற்றவாளி ரடொவான் கராட்சிச் கைது செய்யப்பட்டதை அடுத்து இவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]