உருசியாவின் தூர கிழக்கில் எரிமலை வெடித்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 20, 2011

உருசியாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் கிசிமென் என்ற எரிமலை 6 கிமீ (3.72 மைல்) உயரத்துக்கு தூசியைக் கிளப்பி வருவதாக உருசியாவின் அறிவியல் கழகம் இன்று அறிவித்துள்ளது.


இரசியாவில் கம்சாத்கா பிரதேசம்
செய்மதியில் இருந்து கிசிமென் எரிமலை, சனவரி 6, 2011

கடந்த 24 மணி நேரத்தில் கிசிமென் எரிமலையின் சுற்றுவட்டத்தில் கிட்டத்தட்ட 200 அதிர்வுகளைத் தமது நிலநடுக்க ஆய்வாளர்கள் பதிந்துள்ளதாக கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


பாதகமான காலநிலை காரணமாக எரிமலைக் குழம்பின் திசையை செயற்கைக் கோள்கள் அறிய முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார். பெத்ரொபவ்லொவ்ஸ்க் உட்பட மக்கள் செறிந்து வாழும் சுற்று வட்டத்தில் தூசிகள் வீழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கம்சாத்காவின் 60 வீத மக்கள் பெத்ரொபாவ்லொவ்ஸ்கில் வசித்து வருகின்றனர்.


எனினும் எரிமலையில் இருந்து கிளம்பும் தூசி அப்பிரதேசத்தில் பறக்கும் விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கம்சாத்கா பிரதேசத்தில் 150 இற்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன, அவற்றில் 29 உயிருடன் உள்ளன.


கிசிமென் எரிமலை பெத்ரொபவ்லொவ்ஸ்கில் இருந்து 265 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கடைசியாக கிசிமென் எரிமலை 1928 ஆம் ஆண்டில் வெடித்தது. 2010 சூன் மாதத்தில் இருந்து இது விழிப்புடன் உள்ளதாகவும், டிசம்பர் மாதத்தில் இருந்து அது வெடிக்க ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]