உருசிய விமான நிலையத் தற்கொலைக் குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 25, 2011

மாஸ்கோவின் தமதேதவோ பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ததேதவோ விமான நிலையம்

பயணிகள் வருகை தரும் பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 1630 மணிக்கு 7கிகி எடையுள்ள டிஎன்டி குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோவில் இருந்து 40 கிமீ தென் கிழக்கே விமான நிலையம் அமைந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஒரு பிரித்தானியரும், ஒரு செருமனியரும் அடங்குவர். குண்டு வெடித்த இடம் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


உருசியாவின் வடக்கு கவ்க்காசியப் பகுதித் தீவிரவாதிகளே இத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் எனப் பரவலாக நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மாஸ்கோவின் சுரங்கத் தொடருந்து ஒன்றில் இரண்டு தற்கொலை குண்டுகள் வெடித்ததில் நாற்பது பேர் கொல்லப்பட்டனர்.


இத்தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களைத் தாம் கண்டுபிடிப்போம் என அரசுத்தலைவர் திமீத்ரி மெத்வேதெவ் தெரிவித்தார். மாஸ்கோவின் சகல போக்குவரத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். உலகத்தலைவர்கள் பலர் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]