கல்கத்தா மருத்துவமனைத் தீ விபத்தில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 9, 2011

இந்தியாவின் கிழக்கே மெற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது 89 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் கீழ்ப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தீப்பரவியதில் இறந்தவர்கள் பெரும்பான்மையானோர் நோயாளிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கீழ்த்தளத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே முதலில் தீப்பற்றியது. தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் வரை போராடியே தீயை முற்றாக அணைக்க முடிந்தது.


தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் உதவியுடன் மாடியை நெருங்கி ஜன்னல்களை உடைத்து உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பலர் நோயாளிகள் என்பதால் அவர்களை ஏணி வழியாக விரைவில் மீட்பதில் பிரச்னை ஏற்பட்டது. எனினும் தங்களால் முடிந்த அளவுக்கு அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்த நோயாளிகளை வீரர்கள் மீட்டனர். 25 தீயணைப்பு வாகனங்களுடன் 250 வீரர்கள் பெரும் போராட்டத்துக்குப்பின் தீயை அணைத்தனர்.


மருத்துவமனை மிகவும் நெரிசலான பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அங்கு போதிய தீ விபத்து தடுப்பு வசதிகள், அவசரமாக வெளியேறும் வழிகள் என எந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை.


இத்தீவிபத்து ஒரு "மன்னிக்கமுடியாத குற்றம்" எனத் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இத் தீவிபத்துக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறினார். ஏழு அடுக்குமாடி கொண்ட இந்த மருத்துவமனையில் பாதுகாப்பு விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.


தீப்பிடித்த உடன் அதனை அணைக்கும் முயற்சி எதையும் மேற்கொள்ளாமல் மருத்துவர்களும், பிற பணியாளர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக மருத்துவமனையின் 6 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.


தீ விபத்து ஏற்பட்டதுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும், அவர்களை கவனிக்க வந்த உறவினர்களும் அங்குமிங்குமாக ஓடியதாகவும், பல இடங்களில் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறி பலர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]