கெமரூச் முன்னாள் சிறைச்சாலை அதிகாரிக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 26, 2010


முன்னாள் கெமரூச் சிறைச்சாலை அதிகாரிக்கு கம்போடியாவின் ஐநா ஆதரவு போர்க்குற்ற நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


கெமரூச் சிறை அதிகாரி "டூச்"

67 வயதான டூச் என்றழைக்கப்படும் இவர் டுவோல் சிலெங் சிறைச்சாலையில் 17,000 இற்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் படுகொலை, சித்திரவதை செய்ய்யப்பட்டதை நேரில் கண்காணித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. குற்றங்களை ஒப்புக்கொண்ட அவர் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.


இப்போர்க்குற்ற நீதிமன்றத்தின் முதலாவது தீர்ப்பு இதுவாகும்.


டூச்சிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு இவருக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர்.


ஆனாலும், டூச் சட்டவிரோதமாக சிறையில் முன்னர் அடைக்கப்பட்டிருந்தார் எனக் காரணம் காட்டி நீதிபதிகள் 5 ஆண்டுத் தண்டனையைக் குறைத்தனர். ஏற்கனவே சில ஆண்டுகள் சிறையில் இருந்த காரணத்தினால் இவரது சிறைத்தண்டனை மேலும் 11 ஆண்டுகள் குறைக்கப்பட்டதில் மொத்தம் 19 ஆண்டுகளில் அவர் விடுதலை பெறுவார்.


இத்தீர்ப்பு நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.


1975 முதல் 1979 வரை கம்போடியாவை ஆட்சி புரிந்த கெமரூச் நிர்வாகம், தமக்கு எதிரானவர்களை டுவோல் சிலெங் சிறையில் அடைத்து வைத்திருந்தது. அதற்குத் தலைமை அதிகாரியாக டூச் பணியாற்றினார்.


கெமரூச் நிர்வாக காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர். 1979 இல் வியட்நாம் படையெடுப்பை அடுத்து கெமரூச் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. கெமரூச் தலைவர் பொல் பொட் 1998 ஆம் ஆண்டில் இறந்தார்.


கெமரூச்சின் வீழ்ச்சியை அடுத்து டூச் தலைமறைவானார். பல மாற்றுப் பெயர்களில் வடமேற்கு கம்போடியாவில் வாழ்ந்து வந்த இவர் பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார்.


டுவோல் சிலெங் சிறைச்சாலையில் இருந்து பத்திற்கும் குறைவானோரே உயிருடன் திரும்பினர். அவர்களில் மூவர் இன்னும் உயிரோடுள்ளனர்.


கெமரூச்சின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த நுவோன் சியா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் இயெங் சாரி, அவரது மனைவி இயெங் திரித் ஆகியோர் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]