உள்ளடக்கத்துக்குச் செல்

உருசிய அணு நீர்மூழ்கிக் கப்பல் தீ விபத்துக்குள்ளானது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 30, 2011

உருசியாவில் நேற்று வியாழக்கிழமை அணு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் செர்கே சோயிகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


டெல்ட்டா-IV வகை அணு நீர்மூழ்கிக் கப்பல்

உருசியாவின் வடமேற்கே மூர்மன்ஸ்க் வட்டாரத்தில் எக்கத்தரின்புர்க் என்ற நீர்மூழ்கிக் கப்பல் திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த போதே நேற்றுத் தீப்பிடித்தது. தீ எதிர்ப்பு நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்காமையே தீப்பிடித்தமைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.


எவரும் இறக்கவோ அல்லது காயங்களுக்குள்ளாகவோ இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார். "கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை," எனத் தெரிவித்தார்.


மரத்தாலான அழிக்கட்டமைப்பிலேயே தீ பரவத் தொடங்கியதாகவும் பின்னர் அது கப்பலின் வெளிச்சுவரில் பற்றித் தீப்பிடித்ததாகவும் முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவரினூடாகத் தீ உள்ளே பரவுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என பேச்சாளர் வதீம் செர்கா தெரிவித்தார். தீயை அணைப்பதற்கு உலங்கு வானூர்தி ஒன்றும் பயன்படுத்தப்பட்டது. தீ மேலும் பரவுவதற்கு முன்னர் அனைத்து அணுவாயுதங்களும் வெளியே எடுக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.


கே-84 எக்கத்தரின்புர்க் நீர்மூழ்கிக் கப்பல் டெல்ட்டா-IV-வகை அணு நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இவ்வகையான 7 உருசிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தற்போது சேவையில் உள்ளன. 1985 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டு சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் 16 ஏவுகணைகளை கொண்டு செல்லக்கூடியது.


ஆகத்து 2000 ஆம் ஆண்டில் கூர்ஸ்க் அணு நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகியதில் அதில் இருந்த 118 மாலுமிகளும் கொல்லப்பட்டனர்.


மூலம்

[தொகு]