உள்ளடக்கத்துக்குச் செல்

ஐவரி கோஸ்ட்: பாக்போ பிரெஞ்சு இராணுவத்தினரிடம் சரணடைந்தார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 12, 2011

ஐவரி கோஸ்டின் சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் லோரண்ட் பாக்போ பிரெஞ்சு இராணுவத்தினரிடம் நேற்று சரணடைந்தார். இதனை அடுத்து ஐக்கிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட அரசுத்தலைவரான அலசான் வட்டாரா நாட்டில் அமைதியைக் கொண்டுவர உதவுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.


புதிய தலைவர் அலசான் வட்டாரா
சரணடைந்த தலைவர் பாக்போ

சரணடைந்த பாக்போ மீது உரிய முறைப்படி நீதி விசாரணைகள் நடத்தப்படும் எனவும் உண்மை மற்றும் இணக்கக் கமிசன் ஒன்று நிறுவப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.


அபிஜான் நகரில் உள்ள அரசுத்தலைவர் மாளிகை மீது பிரெஞ்சு இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களை அடுத்து சரணடைந்த பாக்போ ஐவரி கோஸ்டில் வழமையான வாழ்க்கை திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


கடந்த நவம்பர் மாதத் தேர்தல்களில் அலசான் வட்டாரா வெற்றி பெற்றிருந்தாலும், தாமே வெற்றி பெற்றதாக பாக்போ அறிவித்திருந்தார். இதனை அடுத்து அவுட்டாராவுக்கு ஆதரவான படைகள் பாக்போவின் வதிவிடம் மீது தாக்குதல்களை ஆரம்பித்திருந்தன. ஐநாவின் ஆதரவுடன் பிரெஞ்சுப் படைகள் வட்டாராவின் படைகளுக்கு பின்பலமாக இருந்தன.


பாக்போ கைப்பற்றப்பட்டதை இட்டு மகிழ்ச்சி தெரிவித்த ஐநா பொதுச் செயலர் பான் கி மூன், கடந்த சில மாதங்களாக உருவெடுத்திருந்த இந்தத் தேவையற்ற பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது எனக் குறிப்பிட்டார். புதிய அரசை ஐக்கிய நாடுகள் ஆதரிக்கும் என அவர் கூறினார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.


இளைஞர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட புதிய தலைவர் வட்டாரா, மிக விரைவில் நாட்டில் அமைதி திரும்பும் என உறுதி அளித்தார். கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற சண்டையில் சிக்கி குறைந்தது 400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக லைபீரியா, மற்றும் கானா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


மூலம்

[தொகு]