நூறாண்டு கண்ட 230,000 சப்பானியர்கள் ’காணாமல்’ போயுள்ளனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டம்பர் 10, 2010

சப்பானில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்து 100 வயதிற்கும் அதிகமானவர்கள் எனப் பதிந்துள்ள 230,000 இற்கும் மேற்பட்ட வயோதிபர்கள் நாட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


டோக்கியோ நகரின் வயதில் கூடிய மனிதர் என அடையாளம் காணப்பட்ட சோஜென் காட்டோ என்ற 111 வயது முதியவரின் எச்சங்கள் அவரது வீட்டில் இருந்து சென்ற மாதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்தக் குடும்பக் கணக்கெடுப்பை அதிகாரிகள் மேற்கொண்டனர். டோக்கியோவின் வயதில் கூடிய மனிதர் என்ற சிறப்பை அவருக்கு அறிவித்து அவருடன் கொண்டாடப் போன அதிகாரிகளுக்கு அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த முதியவர் 30 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டமை தெரிய வந்தது. அவரது எச்சங்கள் 30 ஆண்டுகளாக அவரது வீட்டில் பாதுகாத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தார்கள். அவரது ஓய்வூதியப் பணத்தை அவரது உறவினர்கள் சட்டவிரோதமாகப் பெற்று வந்துள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனைவி இறந்ததன் பின்னர் 9.5 மில்லிய யென் பணம் ஓய்வூதியமாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


முதியவர்கள் என அடையாளம் காணப்பட்ட பலர் இரண்டாம் உலகப் போரின் போதோ அல்லது பிற்பாடோ இறந்து போயிருக்கலாம், வேறு சிலர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருக்கலாம் என சமூக நலத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


உலகின் மிக விரைவாக முதுமையடையும் மக்களைக் கொண்டுள்ள நாடுகளில் சப்பானும் ஒன்று. ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒருவர் 65 வயதைக் கடந்தவர்கள் ஆவர்.

மூலம்