உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராக் தொடர் குண்டு வெடிப்புக்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 23, 2011

ஈராக்கியத் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டு, சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.


நகரின் சியா மற்றும் சுன்னி இன மக்கள் வசிக்கும் 13 இடங்களில், 14 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன என்று ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.


இந்தக் குண்டு தாக்குதல்கள் நேற்றுக் காலை பாக்தாதின் அலாவி, பாப் அல் முதாம், கர்ராதா மாவட்டம், அத்யாமிய, ஜுவலா, கிழக்கு ஜெத்ரியா, கசாலியா, அல் ஆமில், தூரா பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. பாதையோரங்கள் கட்டிடங்கள் எனப் பல இடங்களில் இக்குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்புக் கூறவில்லை. எனினும் திட்டமிட்ட ஓர் அமைப்பே இத் தாக்குதலை நடத்தியிருக்கும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இந்தத் தாக்குதல்கள் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து நடத்தப்படவில்லை என்று, பாதுகாப்பு படைகளின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் காசிம் அத்தா தெரிவித்துள்ளார். பாடசாலைகள், தினக்கூலிகள் மற்றும் ஊழல் தடுப்பு அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்தே தாக்குதல் இடம்பெற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.


ஈராக்கில் இருந்து அமெரிக்கப்படைகள் முழுமையாக வெளியேறிய ஓரிரு நாட்களில் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அங்கு சியா, சுன்னி முஸ்லிம் பிரிவுகளுக்கு இடையில் முறுகல் நிலை வலுப்பெற்றுள்ளது. அந்நாட்டின் மிக மூத்த சுன்னி அரபு அரசியல்வாதியும், நாட்டின் துணை அதிபருமான தாரிக் அல் ஹஷ்மி அவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தக் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மூலம்

[தொகு]