அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற குடியேறிகள் 72 பேர் மெக்சிக்கோவில் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 26, 2010

மெக்சிக்கோவின் பண்ணை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 72 உடல்களும் ஐக்கிய அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற குடியேறிகளுடையது என அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்ட 58 ஆண்கள், மற்றும் 14 பெண்களும் தெற்கு மற்றும் நடு அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுடையது என அவர்கள் தெரிவித்தனர்.


கடந்த செவ்வாய்க்கிழமயன்று பாதுகாப்புப் படையினருக்கும், போதைப் பொருள் கடத்தும் கும்பல் ஒன்றிற்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையை அடுத்து பண்னையொன்றில் இருந்த அறை ஒன்றினுள் இந்த 72 பேரினதும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அவ்வறையில் ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டிருந்தன.


இந்நிகழில் தப்பிய குடியேற்ற வாசி ஒருவரின் தகவலின் படி இவர்கள் அனைவரும் ஆயுதக் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டவர்கள் என்றும் பின்னர் கொல்லப்பட்டவர்கள் என்றும் அறியப்படுகிறது.


தான் எக்குவடோரைச் சேர்ந்தவர் என்றும் மீதமானோர் எல் சல்வடோர், ஒந்துராஸ், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஆயுதக்கும்பலுக்குப் பணி புரிய மறுத்தததனாலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இக்கும்பலில் இருந்து தாம் மட்டும் தப்பி வந்து அருகில் இருந்த கரையோரக் கடற்படையினரிடம் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.


இதனையடுத்து இராணுவத்தினர் அங்கு அனுப்பப்பட்டதை அடுத்து ஆயுதக் கும்பல் இராணுவத்தினரை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.


கொல்லப்பட்டோரை அடையாளம் காண்பதற்காக பல்வேறு நாட்டுத் தூதரகங்களுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கடந்த சில மாதங்களாக மெக்சிக்கோவின் பல இடங்களிலும் கொல்லப்பட்ட சடலங்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. கடந்த மாதத்தில் டாக்ஸ்கோ என்ற இடத்தில் 50 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


மெக்சிக்கோவில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளில் 28,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]


மூலம்[தொகு]