உள்ளடக்கத்துக்குச் செல்

’செவ்வாய்500’ பரிசோதனையை முடித்துக்கொண்டு விண்வெளி வீரர்கள் 'பூமி' திரும்பினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 4, 2011

செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக அதனை ஒப்புச்செயலாக்கும் பரிசோதனைத் திட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.


மார்ஸ்500 பரிசோதனை விண்கலம்

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலமாக மாஸ்கோவில் மூடிய இரும்புக் குழாய்களுக்குள் ஆறு வீரர்கள் தமது பரிசோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.


2010 ஆம் ஆண்டு சூலை 3 ஆம் நாள் இந்த விண்கலத்தின் கதவுகள் மூன்று உருசியர்கள், ஒரு பிரான்சியர், ஒரு இத்தாலியர், ஒரு சீனர் ஆகியோருடன் இறுகப் பூட்டப்பட்டது. இன்று அக்கதவுகள் திறந்து விடப்பட்டு அனைவரும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.


520 நாட்கள் பரிசோதனையின் பின்னர் வெளியேறிய வீர்ரகளை அவர்களது உறவினர்கள், மற்றும் உருசிய உயிரிமருத்துவக் கழகத்தின் அறிவியலாளர்களும் வரவேற்றனர்.


இத்திட்டம் செவ்வாய்500 (Mars500) திட்டம் எனப் பெயரிடப்பட்டது. நீண்டகால விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் போது விண்வெளி வீரர்களின் மனம் மற்றும் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதைக் கண்டறியும் முகமாகவே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இப்பரிசோதனையின் போது, செவ்வாய்க் கோளில் இறங்குவது மற்றும் நடப்பது போன்ற பல பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


"திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. நாம் அனைவரும் நல்ல தேகாரோக்கியத்துடன் உள்ளோம். இனி எமது அடுத்த திட்டத்தை நோக்கிச் செல்லவிருக்கிறோம்," என இப்பரிசோதனையில் தலைவராகச் செயல்பட்ட அலெக்சி சீத்தேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவருடன் திட்டத்தில் கலந்து கொண்ட ஏனையோர் அலெக்சாண்டர் சிமலியேவ்ஸ்கி, சூக்ரோப் கமலோவ், ரொமயின் சார்ல்ஸ் (பிரான்சியர்), டியேகோ ஊர்பீனா (இத்தாலியர்), மற்றும் வாங் யூ (சீனர்) ஆகியோராவர்.


இவர்கள் அனைவரும் இப்போது மருத்துவப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


மூலம்

[தொகு]