மறைந்து தாக்கும் டி-50 ரக போர் விமானத்தை உருசியா பறக்கவிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 18, 2011

அமெரிக்காவின் எஃப்-22 ரகப் போர் விமானங்களுக்கு இணையான தனது மறைந்து தாக்கும் போர் விமானத்தை உருசியா முதன் முதலாகப் பறக்க விட்டது.


இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட சுகோய் டி-50 (Sukhoi T-50) என்ற இந்த போர் விமானம் தலைநகர் மாஸ்கோவில் நேற்று இடம்பெற்ற மாக்ஸ் 2011 விமானக் காட்சியில் பறக்கவிடப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இவ்வகைப் போர் விமானங்களை உருசியா தயாரிக்கும். இவற்றில் 200 வரையான விமானங்களை இந்தியா வாங்க விருக்கிறது. 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இவை தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


யுனைட்டட் ஏர்கிராஃப்ட் என்ற அரசு நிறுவனம் இவ்விமானத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. "டி-50 ஜெட் சுப்பர்சோனிக் விமானம் உருசிய விமானப் படைக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் தனது சேவைகளை வழங்கும்," என அந்நிறுவனத்தின் தலைவர் மிக்கைல் பகசியான் தெரிவித்தார். உருசிய விமானப் படை இவ்வகை விமானங்கள் 200 ஐ வாங்க விருப்பதாகவும், அவை தற்போதுள்ள எஸ்யு-27 போர் விமானங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


டி-50 ரக விமானங்கள் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக அதன் வெளியீடு பல தடவைகள் தள்ளிப் போடப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் இரகசியமான முறையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.


நீண்ட தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தவல்லது என்றது மட்டுமின்றி, விண் பாதுகாப்பிலும், எதிரியின் ராடாரில் சிக்காத வல்லமையும், விண் போரில் எப்படிப்பட்ட சூழலிற்கு ஏற்பவும் பயன்படுத்திக்கொள்ளத் தக்கதாக உருவாக்கப்பட்டுள்ள சுகோய் டி-50 அனைத்துக் காலநிலைகளுக்கும் தாக்குப் பிடிக்கக்கூடிய T-50 விமானங்கள் 300 முதல் 400 மீட்டர்கள் ஓடுபாதையில் புறப்படவல்லன. அத்துடன், வானிலும், தரையிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தக் கூடியவை என்றும் கூறப்படுகிறது.


இவற்றுக்கு இணையான அமெரிக்க விமானங்களை அமெரிக்காவின் ராப்டர் நிறுவனம் 140 மில்லியன் டாலர்களுக்கு (20 ஆண்டுகளுக்கு முன்னர்) விற்பனை செய்தது.


மூலம்[தொகு]