உள்ளடக்கத்துக்குச் செல்

துருக்கியில் குர்தியப் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல், 18 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 19, 2012

துருக்கியில் ஈரான், ஈராக்குடனான எல்லைப் பகுதியில் குர்தியப் போராளிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். யுக்செக்கோவா என்ற இடத்தில் இந்தத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புப் படையினர் உலங்கு வானூர்திகள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான போராளிகள் வடக்கு ஈராக்கில் உள்ள மறைவிடங்களில் நிலைகொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டில் போராளிகள் ஆயுதம் தாங்கிப் போரிட ஆரம்பித்ததில் இருந்து அங்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்துள்ளனர்.


நேற்றிரவு எல்லையைத் தாண்டி துருக்கியப் பகுதிக்குள் நுழைந்த போராளிகள் அங்குள்ள இராணுவக் காவலரண் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீண்டும் ஈராக்கிற்குள் தப்பியோடி விட்டனர் என அவர்கள் தெரிவித்தனர். 10 போராளிகளும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.


பிரதமர் ரிசெப் தாயிப் எர்தோகனின் அரசு போராளிகள் மீது தற்போது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். போராளிகளுக்கு ஆதரவளிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குர்திய சிறுபான்மை மக்கள் துருக்கியின் மொத்த மக்கள் தொகையில் 20 வீதமாகும். துருக்கியை விட ஈராக், ஈரான், மற்றும் சிரியாவிலும் இவர்கள் வசித்து வருகின்றனர்.


தென்கிழக்கு துருக்கியில் தனிநாட்டுக்காகப் போராடி வரும் பிகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை ஒரு தீவிரவாதக் குழுவாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வகைப்படுத்தியுள்ளன. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள போராளிகள் குர்திய மக்களுக்கு கலாசார உரிமைகளையும் கூட்டமைப்புக்குள் தன்னாட்சி கோரிப் போராடுவதாகவும் அறிவித்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]