உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராக்கில் தொடர் குண்டுத்தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 17, 2011

ஈராக்கில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் 42 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புளில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின் நடந்துள்ள மிகப் பெரிய தொடர் தாக்குதல் இது எனக் கருதப்படுகின்றது.


ஈராக்கின் தலைநகரம் பாக்தாதின் மையப் பகுதியில் உள்ள கட்டிட நிர்மாணப் பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில் குடிநீரைக் குளிராக வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியொன்றிலிருந்தே முதலாவது குண்டு வெடித்ததாகவும், மற்றையது வாகனத் தரிப்பிடத்தில் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் காயமடைந்தனர்.


இது தவிர பக்பா நகரில் ராணுவ சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நகரில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கிர்குக் நகரிலும், நஜப், கர்பாலா ஆகிய நகரங்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.


மொத்தத்தில் நாடு முழுவதும் 42 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்தன. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஈராக்கில் வன்முறைகள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் கருதப்படுகின்ற போதும் பெரும்பாலும் நாளாந்தம் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட தொகையான அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்தும் நாட்டில் வைத்திருப்பதற்கான பேச்சுகளை அமெரிக்காவும் ஈராக்கும் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


மூலம்

[தொகு]