உள்ளடக்கத்துக்குச் செல்

எபோலா நச்சுயிரி உகாண்டாவின் தலைநகருக்கும் பரவியுள்ளதாக எச்சரிக்கை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 30, 2012

உயிரைப் பறிக்கும் எபோலா தீநுண்ம நோய் உகாண்டா தலைநகர் கம்பாலாவிற்கும் பரவியதால், நகர மக்கள் ஒருவரோடொருவர் உடற்தொடர்பு வைப்பதைத் தவிர்க்குமாறு உகாண்டா அரசுத்தலைவர் யொவேரி முசவேனி கேட்டுக் கொண்டுள்ளார்.


எபோலா தீநுண்மம்

மூன்று வாரங்களுக்கு முன்னர் உகாண்டாவின் மேற்குப் பகுதியில் இந்நோய் பரவியதை அடுத்து தலைநகரில் ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத்தலைவர் தனது சிறப்புச் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


எபோலா தீநுண்ம நோய் உலகின் மிகவும் வீரியமான வைரசு எனக் கருதப்படுகிறது. முக்கியமாக உடற்தொடர்பினாலேயே இந்நோய் பரவுகிறது. இந்நோய் தொற்றியவர்களில் 90 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர்.


இந்நோயாளர்களுடன் தொடர்புக் கொண்டவர்கள் பற்றிய விபரங்களை மருத்துவ ஊழியர்கள் சேகரித்து வருகிறார்கள் எனவும் திரு. முசவேனி தெரிவித்தார். இந்நோய் பரவாமல் தடுக்க மக்கள் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்தல், முத்தமிடல், பாலுறவு கொள்ளல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


எபோலா நோய் எனச் சந்தேகத்தில் இறப்பவர்கள் எவரையும் அவர்களது உறவினர்கள் உடனடியாக அடக்கம் செய்யக் கூடாது எனவும், பதிலாக சுகாதார அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


கடந்த 12 ஆண்டுகளில் உகாண்டாவில் மூன்று முறை இந்த நச்சுயிரி நோய் பரவியுள்ளது. 2000 ஆம் ஆண்டில் 425 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


இந்த நோய் தீ நுண்மத்தால் உண்டாவதால் மருந்துகள் இல்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் பலர் உயிர் பிழைக்கின்றனர். எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர்ம இழப்பைச் சரிக்கட்ட அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும்.


எபோலா தீ நுண்மத்திற்கான தடுப்பு மருந்து கண்டறிய அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.


மூலம்

[தொகு]