காஷ்மீரில் மின்விநியோகம் கோரிப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 3, 2012

இந்தியாவின் காஷ்மீரில் மின்சாரம் வழங்கக் கோரிப் போராடிய மக்கள் மீது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலகப் பாதுகாப்புப் படையினர் நேற்றுத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் படுகாயமுற்றனர். 5 பாதுகாப்புப் ப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காஷ்மீரின் வடக்கே பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போன்யர் பகுதியில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு இருந்து வருவதால் அதைக் கண்டித்தும், முறையாக மின்விநியோகம் செய்யுமாறும் கோரியும் அவ்வூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதட்டம் நிலவியது.


போராட்டம் நடத்தியவர்கள் மின் நிலைய பிரதான நுழைவாயிலை நோக்கி முன்னேறிய போதே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. சாவுக்கு காரணமாக இருந்த தொழில் பாதுகாப்பு படை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் போராட்டம் வலுத்துள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்திடம், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசு கடும் அதிருப்தியும், வருத்தமும் தெரிவித்துள்ளது.


ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் பற்றாக்குறை இருந்து வந்ததால் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த போராட்டம் ஏனைய மாநிலங்களிலும் பரவி விடலாம் என சம்பவம் நடந்த பகுதிக்கு உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.


மூலம்[தொகு]