உள்ளடக்கத்துக்குச் செல்

சைபீரியாவில் ஜெட் விமானம் தீப்பற்றியதில் மூவர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 2, 2011

மேற்கு சைபீரிய நகரான சுர்கூட்டின் விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் ஜெட் விமானம் ஒன்றின் எந்திரம் தீப்பிடித்து விமானம் வெடித்ததில் மூன்று பயணிகள் கொல்லப்பட்டதாகவும், 43 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


து-154 விமானம்

விமானம் வெடித்துச் சிதற முன்னரே 124 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் வெளியேற்றப்பட்டனர். விமானம் தீப்பிடித்து வெடித்ததில் 100 சதுர மீட்டர் சுற்று வட்டத்துக்கு தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 10 பயணிகள் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஆறு பேர் தீக்காயங்களுக்குள்ளானதாக நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.


விமானம் தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என உருசியாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈகர் லெவித்தின் தெரிவித்தார். தூப்போலெவ் (து-154) விமானம் சைபீரியாவில் இருந்து மாஸ்கோ செல்லுவதற்காகப் புறப்பட்டிருந்தது.


1970களில் அறிமுகப்படுத்தப்பட்ட து-154 விமானங்கள் பல அண்மைக்காலத்தில் விபத்துகளுக்குள்ளாயுள்ளன. கடந்த 2010 சனவரியில் இருந்து உருசியாவின் தேசிய விமான சேவையான ஏரோபுளொட் தமது சேவையில் இருந்த 23 து-154 விமானங்களையும் சேவையில் இருந்து திரும்ப எடுத்துக்கொண்டது.


போலந்து விமானப்படையின் து-154 விமானம் சென்ற ஆண்டு விபத்துக்குள்ளாகியதில் போலந்து அரசுத்தலவர் லேக் காச்சின்ஸ்கி கொல்லப்பட்டார்.


மூலம்

[தொகு]